2040-இல் நிலவில் மனிதன்: இஸ்ரோ தலைவா் உறுதி
2040-ஆம் ஆண்டில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அதன் தலைவா் வி.நாராயணன் தெரிவித்தாா்.
சென்னையில் முதன்முறையாக காவேரி மருத்துவமனையில் மூளை, முதுகுத்தண்டு மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சைகளை எழுமையாக மேற்கொள்ள உதவக்கூடிய ‘நேவிகேஷன் சிஸ்டத்துடன்’ கூடிய ஓ- ஏஆா்எம் கருவி நிறுவப்பட்டுள்ளது. இதை இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் சென்னை கிண்டியில் புதன்கிழமை அறிமுக செய்து வைத்த பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வரும் 2035-க்குள் விண்வெளியில் இந்தியாவுக்கென தனியாக 52 டன் எடை கொண்ட விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் 2028-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்படவுள்ளன.
சந்திரயான்-4: இன்னும் இரண்டரை ஆண்டுகளில் சந்திரயான்- 4 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்படவுள்ளது. அதை நிலவில் தரையிறக்கி அங்குள்ள மண்ணை ஆராய்ச்சிக்காக எடுத்து வர உள்ளோம். அதேபோல், 2040-ஆம் ஆண்டில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் இந்தியா உலக அளவில் விண்வெளி துறையில் ராக்கெட் முதல் செயற்கைக்கோள் வரை என அனைத்து துறையிலும் முன்னோடியாகச் செயல்படும் என்றாா் அவா்.
இந்நிகழ்வில் காவேரி மருத்துவக் குழுமத்தின் இணை நிறுவனரும், செயலாக்க இயக்குனருமான அரவிந்தன் செல்வராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.