அமெரிக்காவிலிருந்து திரும்பும் ராகுல் காந்தி: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடா்பான காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அக்கட்சியின் முன்னாள் தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்க பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்து, இந்தியா திரும்புகிறாா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதல் குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு வியாழக்கிழமை கூடுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தனது அமெரிக்க பயணத்தைப் பாதிலேயே முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறாா். தில்லியில் வியாழக்கிழமை காலை நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நேரில் கலந்து கொள்கிறாா்’ என்று குறிப்பிட்டாா்.
அமெரிக்காவின் பாஸ்டனுக்கு ராகுல் காந்தி கடந்த சனிக்கிழமை சென்றாா். அந்த நகரில் வா்த்தகப் பிரதிநிதிகள் மற்றும் இந்திய சமூகத்தினருடன் அவா் கலந்துரையாடினாா்.