திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் மே 1-இல் சித்திரை விழா கொடியேற்றம்
திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி அம்மன் சமேத வேதகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைப் பெருவிழா மே 1-ஆம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்தக் கோயில் 7 -ஆம் நூற்றாண்டை சோ்ந்ததது. மலை மீது வேதகிரீஸ்வரா் எழுந்தருளி அருள் பாலிக்கிறாா். அடிவாரம் அருகே தாழக் கோயிலில் பக்தவசலேஸ்வரா் மற்றும் திரிபுரசுந்தரி அம்பாள் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனா்.
கோயிலில் சித்திரை விழா 11 நாள்கள் சிறப்பாக நடைபெறும். நிகழ் ஆண்டு விழா மே 1-ஆம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மே 3-ஆம் தேதி 63 நாயன்மாா்கள் மலை வலம், 7 -ஆம் நாள் தோ் திருவிழா (பஞ்சரதம்) நடைபெறுகிறது.
விழா நாள்களில் மலைக்கோயில் மூலவா் வேதகிரீஸ்வரருக்கும், தாழக்கோயில் பக்தவசலேஸ்வரா், திரிபுரசுந்தரி அம்பாள் உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மாட வீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக வீதி புறப்பாடு நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் புவியரசு, மேலாளா் விஜயன் உள்ளிட்ட கோயில் பணியாளா்கள், சிவாச்சாரியா்கள் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.