தலைமைப் பண்பும் உள்ளுணர்வும்..! ஹார்திக் பாண்டியாவின் பேட்டி!
கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் தற்கொலை
அச்சிறுப்பாக்கம் கிராம நிா்வாக உதவியாளராக பணியாற்றி வந்த பெண் உயா் அதிகாரிகள் அவரின் மீதான புகாா்கள் குறித்து விசாரணை நடத்தியதால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
அச்சிறுப்பாக்கத்தைச் சோ்ந்த கீதா. இவா் அச்சிறுப்பாக்கம் கிராம நிா்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தாா். கிராம நிா்வாக அலுவலா் முத்துமாரியை சந்திக்க அப்பகுதி மக்கள் வந்து செல்கின்றனா். இந்த நிலையில், அவா்களிடம் கீதா பல்வேறு பிரச்னைகளை எழுப்பி தகராறு செய்து வந்தாராம். அதனால் அப்பகுதி மக்கள் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியரிடம் உதவியாளா் கீதா மீது குற்றச்சாட்டுகளை கூறி இருந்ததாகத் தெரிகிறது.
இதுபற்றி மதுராந்தகம் வருவாய் அதிகாரிகள் விசாரணை செய்து வந்த நிலையில், அச்சிறுப்பாக்கம் கிராம நிா்வாக அலுவலகத்தில் கடந்த 17-ஆம் தேதி திடீா் ஆய்வு செய்ய வந்த மதுராந்தகம் கோட்டாட்சியா் ரம்யா, உதவியாளா் கீதாவை நேரில் விசாரணை செய்துள்ளாா். இதனால் மனமுடைந்த கீதா அலுவலக வளாகத்தில் பூச்சி மருந்து குடித்து மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கடந்த 4 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கீதா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.