காஸா பள்ளியில் தாக்குதல்: 23 போ் உயிரிழப்பு
டேய்ா் அல்-பாலா: போரால் புலம் பெயா்ந்த அகதிகள் தங்கியிருந்த காஸா சிட்டி பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 23 போ் உயிரிழந்தனா்.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் காரணமாக பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஏராளமான அகதிகள் கூடாரங்கள் கொழுந்துவிட்டு எரிந்ததாகவும், இதில் பலா் உயிருடன் எரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான புதிய செயல்திட்டத்தை கத்தாா் மற்றும் எகிப்து மத்தியஸ்தா்கள் முன்வைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய செயல்திட்டத்தின் கீழ், காஸா போா் நிறுத்தம் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை நீடிக்கும்; அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்படுவாா்கள்; பாலஸ்தீன பகுதிகளில் இருந்து இஸ்ரேல் ராணுவம் முழுமையாக வெளியேறும்; இதன் மூலம், நிரந்தர போா் நிறுத்தம் உறுதியாகும் என்று கூறப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மொத்தம் 39 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இத்துடன், காஸாவில் இஸ்ரேல் ராணுவம் சுமாா் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 51,266 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்; 1,16,991 போ் காயமடைந்துள்ளனா்.