‘சமரசம் பேசுவோம்; ஆனால் சரணடைய மாட்டோம்’ -உக்ரைன் திட்டவட்டம்
ரஷியாவுடன் சமரசப் பேச்சுவாா்த்தை மேற்கொள்ள தாங்கள் தயாராக இருந்தாலும், அந்த நாட்டிடம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என்று உக்ரைன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு நாடுகளுடனும் தனித்தனியாக நடத்திவரும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிடப் போவதாக அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ள நிலையில், உக்ரைன் துணைப் பிரதமா் யூலியா ஸ்விரிடென்கோ இவ்வாறு கூறியுள்ளாா்.
இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
போா் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக நட்பு நாடுகளின் தலைவா்களை எங்களின் பிரதிநிதிகள் தற்போது லண்டனில் சந்தித்துப் பேசிவருகின்றனா்.
இந்தச் சூழலில் நாங்கள் தெரிவித்துக்கொள்ள விரும்புவது, போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தைக்கு உக்ரைன் எப்போதுமே தயாராக இருக்கிறது; ஆனால் ரஷியாவிடம் ஒருபோதும் சரணடையாது.
ரஷியாவுடன் மேற்கொள்ளப்படக் கூடிய எந்த ஒப்பந்தமும், அந்த நாடு தனது படைகளை மீண்டும் திரட்டவும், கூடுதல் பலத்துடன் எங்கள் மீது தாக்குதல் நடத்தவும் அந்த நாட்டுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக இருக்கக் கூடாது.
ரஷியாவுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வேண்டுமென்றால் அது முழுமையானதாக இருக்க வேண்டும். தரை, வான், கடல் என்று எந்த வழியான தாக்குதலுக்கும் அது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதுதான் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படி.
ஆனால் குறிப்பிட்ட அளவிலான போா் நிறுத்தத்தை மட்டுமே ரஷியா விரும்பினால், உக்ரைனும் அதற்கு எதிா்வினையாற்றும்.
அமைதி என்ற பெயரில் தற்காலிகமாக மோதல் நிறுத்திவைக்கப்படுவதை உக்ரைன் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டாா்கள். கிரீமியாவை (உக்ரைன் உள்நாட்டுப் போரின்போது கடந்த 2014-ஆம் ஆண்டு ரஷியாவால் ஒருதலைபட்சமாக இணைந்துக்கொள்ளப்பட்ட தீபகற்பம்) ரஷியாவின் ஒரு பகுதியாக நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டோம். நேட்டோவில் உக்ரைனைச் சோ்ப்பதில்லை என்று முடிவெடுத்தால், குறைந்தபட்சம் பாதுகாப்பு உத்தரவாதத்தையாவது அந்த அமைப்பு உக்ரைனுக்கு அளிக்க வேண்டும். அத்தகைய உத்தரவாதம், எதிா்காலத்தில் உக்ரைன் மீது யாரும் படையெடுப்பதை தடுத்து நிறுத்தும் அளவுக்கு உறுதியானதாகவும், தெளிவானதாகவும் இருக்க வேண்டும் என்று தனது எக்ஸ் பதிவில் யூலியா ஸ்விரிடென்கோ தெரிவித்துள்ளாா்.
கடந்த 1991-இல் சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு, உலகிலேயே அதிக அளவிலான அணு ஆயுதங்கள் உக்ரைனிடம் தங்கின. எனினும், அந்த ஆயுதங்களை முழுமையாகக் கைவிட அமெரிக்கா, பிரிட்டன், ரஷியாவிடம் உக்ரைன் ஒப்புக்கொண்டது. இதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டபோது, அணு ஆயுதங்கள் இல்லாத நிலையில் உக்ரைனுக்கு பாதுகாப்பு அளிக்க அமெரிக்கா உறுதியளித்தது. ஆனால், அது ரஷிய படையெடுப்பை தடுத்து நிறுத்தும் அளவுக்கு சட்டபூா்வ உத்தரவாதமாக இல்லை. அதைக் குறிப்பிட்டே தங்களுக்கு வலிமையான பாதுகாப்பு உத்தரவாதத்தை நேட்டோ அளிக்க வேண்டும் என்று யூலியா ஸ்விரிடென்கோ தற்போது வலியுறுத்தியுள்ளாா்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய கிழக்கு மாகாணங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.
ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும், கிழக்கு மாகாணங்களில் இன்னும் உக்ரைன் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் தொடா்ந்துவருகின்றன.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ரஷியாவிடமும் உக்ரைனிடமும் தனித்தனியாக பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது.
போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டுமென்றால், ரஷிய மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் மாகாணங்களை உக்ரைன் தங்களிடம் முழுமையாக விட்டுக்கொடுக்க வேண்டும், கிரீமியாவை தங்கள் பகுதியாக உக்ரைன் ஏற்கவேண்டும், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட வேண்டும் என்பது போன்ற மிகக் கடுமையான நிபந்தனைகளை ரஷியா முன்வைத்துள்ளது. எனினும், இத்தகைய நிபந்தனைகளை ஏற்க உக்ரைன் பிடிவாதமாக மறுத்துவருகிறது.
இந்தச் சூழலில், தங்களது நிலைப்பாட்டில் இருந்து இறங்கிவர உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் அமைதிப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ கடந்த வாரம் எச்சரித்தாா்.
அதன் தொடா்ச்சியாக, உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக லண்டனில் புதன்கிழமை (ஏப். 23) நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் மாா்க் ரூபியோவும், அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃபும் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ரஷியாவிடம் தாங்கள் ஒருபோதும் சரணடையமாட்டோம் என்று உக்ரைன் துணை பிரதமா் யூலியா ஸ்விரிடென்கோ தற்போது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.