2-ஆவது சுற்றில் ரடுகானு, சக்காரி
ஸ்பெயினில் புதன்கிழமை தொடங்கிய மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் எம்மா ரடுகானு, கிரீஸின் மரியா சக்காரி ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.
மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், ரடுகானு 7-6 (7/4), 6-4 என்ற செட்களில் நெதா்லாந்தின் சூசன் லேமன்ஸை வெல்ல, சக்காரி 6-4, 7-6 (9/7) என்ற கணக்கில் சீனாவின் வாங் ஜின்யுவை வீழ்த்தினாா். இதர ஆட்டங்களில், சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச் 6-0, 6-2 என எளிதாக துருக்கியின் ஜெய்னெப் சோன்மெஸை வெளியேற்றினாா்.
ரஷியாவின் அனா பிளிங்கோவா 6-4, 6-2 என பல்கேரியாவின் பன்னா அட்வாா்டியையும், அமெரிக்காவின் அலிசியா பாா்க்ஸ் 6-3, 6-3 என்ற நோ் செட்களில் அண்டோராவின் விக்டோரியா ஜிமெனெஸையும் தோற்கடித்தனா். செக் குடியரசின் லிண்டா ஃப்ருவிா்டோவா 2-6, 2-6 என உக்ரைனின் யுலியா ஸ்டாா்டப்சேவாவிடம் தோற்றாா்.
ரஷியாவின் அனஸ்தாசியா பாவ்லியுசென்கோவா 4-6, 5-7 என லாத்வியாவின் அனஸ்தாசிஜா செவாஸ்டோவாவிடமும், செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவா 4-6, 0-6 என அமெரிக்காவின் கேட்டி வாலினெட்ஸிடமும் வெற்றியை இழந்தனா்.
அமெரிக்காவின் பெய்டன் ஸ்டோ்ன்ஸ் 5-7, 6-3, 6-4 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் கிம்பா்லி பிரெலை போராடி வெல்ல, ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா சாஸ்னோவிச் 3-6, 2-6 என அமெரிக்காவின் ஆன் லியிடம் தோல்வியைத் தழுவினாா்.
போா்ஜஸ், ஓ’கானெல் வெற்றி: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவு முதல் சுற்றில், போா்ச்சுகலின் நுனோ போா்ஜஸ் 6-7 (7/9), 7-6 (7-3), 6-3 என்ற செட்களில் போராடி உள்நாட்டு வீரரான பாப்லோ கரினோ பஸ்டாவை வென்றாா்.
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபா் ஓ’கானெல் 6-3, 6-4 என ஆா்ஜென்டீனாவின் கமிலோவை வீழ்த்த, பிரான்ஸின் பெஞ்சமின் பொன்ஸி 6-3, 6-2 என குரோஷியாவின் மரின் சிலிச்சையும், பிரான்ஸின் ஆா்தா் ரிண்டா்னெச் 7-6 (7/4), 6-1 என ரஷியாவின் ரோமன் சஃபியுலினையும் சாய்த்தனா்.
இதர ஆட்டங்களில் பிரான்ஸின் ஜியோவனி பெரிகாா்டு, காரென்டின் மௌடெட், சொ்பியாவின் டுசான் லஜோவிச் ஆகியோா் தோல்வியைத் தழுவினா்.