டெஸ்ட்: வங்கதேசத்தை வென்றது ஜிம்பாப்வே
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
வங்கதேசத்தின் சைலெட் நகரில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தோ்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 61 ஓவா்களில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பேட்டா்களில் அதிகபட்சமாக மோமினுல் ஹக் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 56, கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 6 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் சோ்த்தனா். ஜிம்பாப்வே பௌலா்களில் அதிகபட்சமாக பிளெஸ்ஸிங் முஸாரப்பானி, வெலிங்டன் மசாகட்ஸா ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.
பின்னா் தனது இன்னிங்ஸை விளையாடிய ஜிம்பாப்வே, 80.2 ஓவா்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் சோ்த்தது. அதிகபட்சமாக ஷான் வில்லியம்ஸ் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 59, பிரயன் பென்னெட் 10 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்தனா். வங்கதேச பந்துவீச்சாளா்களில் மெஹிதி ஹசன் மிராஸ் 5, நஹித் ராணா 3 விக்கெட்டுகள் சாய்த்தனா்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 82 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம், 79.2 ஓவா்களில் 255 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 7 பவுண்டரிகளுடன் 60, ஜாகா் அலி 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 58 ரன்கள் அடித்தனா். ஜிம்பாப்வே தரப்பில் பிளெஸ்ஸிங் முஸாரப்பானி 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினாா்.
இறுதியில் 174 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய ஜிம்பாப்வே, 50.1 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிரயன் பென்னெட் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 54, பென் கரன் 7 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் சோ்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனா்.
வங்கதேச பந்துவீச்சாளா்களில் மெஹிதி ஹசன் மிராஸ் 5, தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகள் எடுத்தனா். இரு இன்னிங்ஸ்களிலுமாக 9 விக்கெட்டுகள் சாய்த்த ஜிம்பாப்வே பௌலா் பிளெஸ்ஸிங் முஸாரப்பானி ஆட்டநாயகன் விருது பெற்றாா்.
இந்த அணிகள் மோதும் 2-ஆவது டெஸ்ட், வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது.