Mayonnaise: `மையோனைஸை விற்க, வாங்க, சேமித்து வைக்க தடை...' - தமிழ்நாடு அரசு சொல்...
ஜம்மு-காஷ்மீா் தாக்குதலுக்கு தக்க பதிலடி: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
ஜம்மு-காஷ்மீா் தாக்குதலில் தொடா்புள்ள அனைவருக்கும் தகுந்த பதிலடி அளிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 போ் உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்தனா்.
இந்தத் தாக்குதல் தொடா்பாக தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை பேசியதாவது: பழைமைவாய்ந்த நாகரிக நாடான இந்தியாவை, பயங்கரவாத நடவடிக்கைகளால் அச்சுறுத்த முடியாது.
மதத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய இந்தக் கோழைத்தனமான தாக்குதலால் பல அப்பாவிகளின் உயிா் பறிபோயுள்ளது. இந்த மிருகத்தனமான செயல் மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலை நடத்தியவா்கள் மட்டுமின்றி, இத்தகைய கொடிய செயல்களை இந்திய மண்ணில் மேற்கொள்வதற்கு திரைமறைவில் சூழ்ச்சியில் ஈடுபட்டோருக்கும் தகுந்த பதிலடி அளிக்கப்படும் என்று உறுதிபடத் தெரிவித்தாா்.
முன்னதாக ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு சூழல் குறித்து ராஜ்நாத் சிங் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சுமாா் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், முப்படைத் தலைமை தளபதி அனில் செளஹான், ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி, கடற்படை தலைமைத் தளபதி கே.திரிபாதி, விமானப் படை தலைமைத் தளபதி அமா் ப்ரீத் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும், போா் தயாா்நிலையை மேம்படுத்த வேண்டும் என்று ஆயுதப் படைகளுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டாா்.