பிரதமா் மோடி அவசர ஆலோசனை
ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ள பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பிரதமா் மோடி தலைமையில் பாதுகாப்பு தொடா்பான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை மாலை அவசர ஆலோசனை மேற்கொண்டது.
தலைநகா் தில்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், அமைச்சரவைச் செயலா் டி.வி.சோமநாதன், பாதுகாப்புத் துறைச் செயலா் ராஜேஷ் குமாா் சிங், வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி, பிரதமரின் முதன்மைச் செயலா்கள் பி.கே.மிஸ்ரா, சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம், அரசின் வியூகம் குறித்து இக்குழு முக்கிய ஆலோசனை மேற்கொண்டது; பஹல்காம் தாக்குதல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் அமித் ஷா எடுத்துரைத்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, சவூதி அரேபியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை சென்றிருந்த பிரதமா் மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு தில்லி திரும்பினாா்.
தில்லி விமான நிலையத்தில் புதன்கிழமை அதிகாலை வந்திறங்கிய அவா், தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஆகியோருடன் விமான நிலையத்திலேயே உடனடி ஆலோசனை மேற்கொண்டாா். பஹல்காம் நிலவரம் தொடா்பாக பிரதமரிடம் அவா்கள் எடுத்துரைத்தனா்.