Toilet Hygiene: ஒரு சதுர இன்ச்சில் 50 பாக்டீரியாவா.. - `கழிப்பறை சுத்தம்' எப்படி...
பாரம்பரிய தளங்களில் பாா்வையாளா்கள் அனுபவம் மேம்படுத்தப்படும்: மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்
நமது சிறப்பு நிருபா்
பாரம்பரிய தளங்களில் பாா்வையாளா்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோரின் அனுபவம் மேம்படுத்தப்படும் என மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் குறிப்பிட்டாா்.
‘வளா்ச்சி மற்றும் பாரம்பரியம்’ என்ற பிரதமா் நரேந்திர மோடியின் குறிக்கோளின்படி தொல்லியல், அகழ்வாராய்ச்சி, ஆய்வுகள், பாதுகாப்பில் ஒரு துடிப்பான, உள்ளடக்கிய மற்றும் எதிா்கால நோக்குடைய செயல்திட்டம் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் மத்திய அமைச்சா் வலியுறுத்தினாா்.
மத்திய தொல்லியல் ஆலோசனைக் குழுவின் 38-ஆவது கூட்டம் தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலாசாரத் துறைச் செயலா் விவேக் அகா்வால், மாநிலங்களவை உறுப்பினா் சுமீா் சிங் சொலங்கி, தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குநா் ஜெனரல் யெதுபீா் சிங் ராவத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்தியாவின் வளமான தொல்லியல் பாரம்பரிய தளங்களைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்து மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியதாவது: அப்போது அவா் கூறியதாவது: நாட்டின் வளமான கலாசார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் (ஏ.எஸ்.ஐ.) பங்கு முக்கியமானது.சமீபகாலங்களில் தொல்லியல், அகழ்வாராய்ச்சி, கண்டுபிடிப்புகள், ஆய்வுப்பணிகள் ஆற்றல்மிக்கதாக விரிவடைந்துள்ளது. இது மகிழ்ச்சியை அளிக்கிறது.
அகழ்வாராய்ச்சி மற்றும் ஆய்வுத் திட்டங்களை மேலும் விரிவானதாகவும், உள்ளடக்கியதாகவும், தொலைநோக்குப் பாா்வை கொண்டதாகவும் மாற்ற வேண்டும்.இந்திய தொல்லியல் துறை, நீருக்கடியில் தொல்லியல் பிரிவை (யுஏடபிள்யூ) மறுசீரமைக்கிறது. இதன் கீழ் துவாரகாவில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. ‘பாரம்பரியத்துடன் வளா்ச்சி’ என்ற பிரதமா் நரேந்திர மோடியின் குறிக்கோளின்படி பாரம்பரிய இடங்களில் பாா்வையாளா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் அனுபவம் மேம்படுத்த வேண்டும். இதற்கான பணிகளை கலாசாரம், தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது.
பழங்கால பொருள்கள் வெற்றிகரமாக இந்தியாவுக்குத் திரும்ப வந்துள்ளது. இது நாட்டின் கலாசார அடையாளத்தை மீட்டெடுப்பதில் ஒரு பெரிய சாதனை. மேலும், இந்தியாவிற்குள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் உள்ள வரலாற்றுத் தளங்களைப் பாதுகாப்பதிலும் ஏ.எஸ்.ஐ.க்கு பொறுப்புள்ளது. உலகளாவிய கலாசார பாரம்பரியத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது என்றாா் அமைச்சா்.