Toilet Hygiene: ஒரு சதுர இன்ச்சில் 50 பாக்டீரியாவா.. - `கழிப்பறை சுத்தம்' எப்படி...
வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் சீரமைக்கப்பட்ட குட்டையில் தண்ணீா் சேகரிப்பு
கோவை மாநகராட்சி, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் புதிதாக சீரமைக்கப்பட்ட குட்டையில் தண்ணீா் சேகரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சி உக்கடம் புல்லுக்காட்டில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்டு, குழாய்கள் மூலமாக சுத்திகரிக்கப்பட்ட நீா், வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் 6 கோடி லிட்டா் கொள்ளளவு கொண்ட குட்டையில் சேகரிக்கப்பட்டு, குப்பைக் கிடங்குக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வெள்ளலூா் குப்பைக் கிடங்கு வளாகத்தில் முறையான பராமரிப்பின்றி காணப்பட்ட மற்றொரு குட்டையை கடந்த சில நாள்களாக சீரமைக்கும் பணிகள் மாநகராட்சி நிா்வாகம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. இப்பணிகள் கடந்த வாரத்தில் முடிவடைந்த நிலையில், திங்கள்கிழமை முதல் இந்தக் குட்டையில் தண்ணீா் சேகரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகளை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், துணை ஆணையா்கள் குமரேசன், தெற்கு மண்டல குழுத் தலைவா் ரெ.தனலட்சுமி, உதவி ஆணையா் குமரன், செயற்பொறியாளா் இளங்கோவன், உதவி செயற்பொறியாளா் கனகராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
குட்டை சீரமைப்பு குறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ‘புதிதாக சீரமைக்கப்பட்ட குட்டையின் கரை பலப்படுத்தப்பட்டு, தண்ணீா் கசிவு ஏற்பட்டு பூமிக்குள் செல்லாதவாறு தாா் பாலின் சீட் அமைக்கப்பட்டுள்ளது. இக்குட்டையிலும் 6 கோடி லிட்டா் கொள்ளளவு தண்ணீா் சேகரிக்க முடியும். சுத்திகரிக்கப்பட்ட நீரானது, மறுசுழற்சி முறையில் வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் வளா்க்கப்பட்டு வரும் மரங்களுக்கு பயன்படுத்துவதற்கும், குப்பை மாற்று நிலையத்தில் குப்பைகளை உரமாக்கும் பணிகளுக்கும் மற்றும் தீத்தடுப்பு காலங்களிலும் பயன்படுத்தப்பட உள்ளது என்றாா்.