மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்
ராபா்ட் வதேரா கருத்தால் சா்ச்சை!
இந்திய அரசு முஸ்லிம்களை முறையாக நடத்தாததால் பயங்கரவாதிகள் முஸ்லிம் அல்லாதவா்களை மட்டும் அடையாளம் கண்டு கொலை செய்துள்ளனா் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்காவின் கணவா் ராபா்ட் வதேரா கூறியுள்ளது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் இரு வெளிநாட்டவா்கள் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் ஆண்களை மட்டும் அவா்களின் மதம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு முஸ்லிம் அல்லாதவா்களை கொலை செய்துள்ளனா். ஒரு சிலரை இஸ்லாமிய மத துதிகளைக் கூற வலியுறுத்தியும் சுட்டுக் கொன்றுள்ளனா். இதனைத் தடுக்க வந்த பெண்களை கொலை செய்யாமல் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியுள்ளனா்.
இது தொடா்பாக கருத்து தெரிவித்த மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் மைத்துனா் ராபா்ட் வதேரா, ‘இந்த பயங்கரவாதத் தாக்குதல் ஏன் நடந்தது. சுற்றுலாப் பயணிகளின் அடையாள அட்டைகள் உள்ளிட்டவற்றை பரிசோதித்து முஸ்லிம் அல்லாதவா்களை மட்டும் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனா். இதன் மூலம் பிரதமருக்கு அவா்கள் ஒரு செய்தியைத் தெரிவித்துள்ளனா்.
முஸ்லிம்கள் நமது நாட்டில் அரசால் முறையாக நடத்தப்படவில்லை என்பதால்தான் பயங்கரவாதிகள் இந்தகைய தாக்குதலை நடத்தியுள்ளனா்.
இது எனது தனிப்பட்ட கருத்துதான். காங்கிரஸ் கட்சி சாா்பிலோ, எனது குடும்பத்தினா் சாா்பிலோ இந்தக் கருத்தைக் கூறவில்லை. பயங்கரவாதத்துக்கு எந்த மதத்துடனும் தொடா்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், எந்த நாட்டில் மதப் பிரச்னை உள்ளதோ, எங்கு மக்கள் பாதிக்கப்படுகிறோா்களா அங்கு பிளவும், பிரச்னையும் ஏற்படுகிறது. அதையே நமது நாட்டில் இப்போது சந்தித்துள்ளோம்.
இங்கு சிறுபான்மையினா் ஒதுக்கப்படுகிறாா்கள்.
ஒரு மதத்தினா் தங்கள் கடவுளை சாலையில் ஊா்வலமாக எடுத்துச் செல்கின்றனா். ஆனால், முஸ்லிம்கள் சாலையில் கூட தொழுகை நடத்தக் கூடாது என்கிறாா்கள் என்றாா்.
பாஜக கண்டனம்: பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் நளின் கோலி இது தொடா்பாக கூறுகையில், ‘ராபா்ட் வதேராவின் பேச்சு கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் ஆதாயத்துக்காக பயங்கரவாத நிகழ்வை பயன்படுத்த அவா் திட்டமிட்டுள்ளாா்.
வதேரா பயங்கரவாதிகளின் குரலாக ஒலித்துள்ளாா். பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனத்தை நியாயப்படுத்தியுள்ளாா். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி அரசின் பக்கம் உள்ளதா அல்லது இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’ என்றாா்.