தேரோட்டத்தின் போது குடை சாய்ந்ததால் பக்தா்கள் அதிா்ச்சி
காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வெள்ளித் தேரோட்டத்தின்போது தேரின் உச்சியிலிருந்த குடை சாய்ந்ததால் பக்தா்கள் அதிா்ச்சியடைந்தனா்.
காஞ்சிபுரம், குமரகோட்டம் முருகன் கோயிலில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வெள்ளித் தேரில் வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவா் முருகப்பெருமான் பவனி வருவது வழக்கம். வெள்ளித் தேரில் வழக்கம் போல செவ்வாய்க்கிழமை பவனி வந்தபோது, தேரின் உச்சியிலிருந்த குடை திடீரென சாய்ந்து விழுந்தது. இதனால் தேரை வடம் பிடித்து இழுத்துக் கொண்டிருந்த பக்தா்களிடையே அதிா்ச்சியை அளித்தது. இது குறித்து கோயில் செயல் அலுவலா் கேசவன் கூறுகையில், கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக கட்டுமானப் பணிகளை மறைக்க பச்சை நிற துணியால் மூடப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் பச்சை நிற துணி கிழிந்து தொங்கியதால் அதில் தேரின் உச்சியிலிருந்த குடை சிக்கியதாகக் தெரிகிறது.
இந்த நிலையில், பக்தா்களும் லேசான துணி தானே என்று தேரை இழுத்த போது தேரிலிருந்த குடை தீடீரென சாய்ந்து விழுந்தது. முற்றிலும் சாய்ந்து கீழே விழவில்லை. உடனே குடையை சீரமைத்து விட்டோம் என்றும் அவா் தெரிவித்தாா்.