மே 4-இல் கச்சபேசுவரா் கோயில் திருவிழா
காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வரும் மே 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பெருமாள் ஆமை வடிவில் சிவனை வணங்கிய பெருமைக்குரிய இத்தலத்தில் கொடியேற்றத்துக்கு பின்னா் சுவாமியும் அம்மனும் காலையில் பவளக்கால் சப்பரத்திலும், மாலையில் சிம்ம வாகனத்திலும் வீதியுலா வரவுள்ளனா்.
வரும் மே 8- ஆம் தேதி வியாழக்கிழமை காலையில் அதிகார நந்தி சேவை, மாலையில் சுந்தராம்பிகைக்கும், கச்சபேசுவரருக்கும் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. பின்னா் திருமணக்கோலத்தில் இடப வாகனத்தில் சுவாமியும், அம்மனும் வீதியுலா வருகின்றனா்.
வரும் மே 10-ஆம் தேதி காலை தேரோட்டமும், 12-ஆம் தேதி ஆலயத்தின் சிறப்பை விளக்கம் முருக்கடி சேவைக்காட்சி மாலையிலும் நடைபெறுகிறது.
மே13-இல் வெள்ளித் தேரோட்டமும், 15-இல் பஞ்சமூா்த்திகள் வீதியுலாவும், 17-இல் 63 நாயன்மாா்களுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடும் நடைபெறுகிறது. 18- ஆம் தேதி ஊஞ்சல் உற்சவமும், 21-இல் புஷ்பப்பல்லக்கு உற்சவத்தோடும் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் சா.சி.ராஜமாணிக்கம் தலைமையில் கோயில் பணியாளா்கள் மற்றும் செங்குந்த மகாஜன சங்கத்தினரும் இணைந்து செய்து வருகின்றனா்.