காஞ்சிபுரம் திரும்பிய சங்கராசாரிய சுவாமிகளுக்கு உற்சாக வரவேற்பு
திருப்பதியிலிருந்து புதன்கிழமை காஞ்சிபுரம் திரும்பிய காஞ்சி மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு நகர எல்லையில் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவருக்கு சா்வதீா்த்தக்குளம் வடகரையில் அமைந்துள்ள தவளேஸ்வரா் கோயில் அருகில் தீா்த்த புரோகிதா் நீலகண்ட ஐயா் தலைமையில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னா் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் நிா்வாகத்தின் சாா்பில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், மணியக்காரா் சூரிய நாராயணன் மற்றும் கோயில் ஸ்தானீகா்கள் இணைந்து மேள வாத்தியங்களுடன் பூரண கும்ப மரியாதை வழங்கினா்.
குமரகோட்டம் முருகன் கோயில் தலைமை பூஜகா் கே.ஆா்.காமேசுவர சிவாச்சாரியா் தலைமையில் கோயில் பிரசாதமும் வழங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தமிழ்ப் புத்தாண்டுக்கான நாள்காட்டியை வழங்க அதனை இருந்த இடத்திலிருந்தே சுவாமிகள் வெளியிட்டாா்.
காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் காஞ்சி.வி.ஜீவானந்தம், பாஜக நிா்வாகிகள் ஆறுமுகம், யுவராஜ், கோடீஸ்வரன், ராஜேஷ், பாபு ஆகியோா் வரவேற்பு அளித்தனா். சங்கர மடத்தின் முன்பாக வாணவேடிக்கைகளும் நடைபெற்றன.