போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்திய 2 போ் கைது
திருப்பூரில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்திய 2 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை ஊசி மூலமாக சிலா் பயன்படுத்தி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின்பேரில் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா். அவா்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்ததால் அவா்களிடம் சோதனை நடத்தியதில் 600 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து நடத்திய விசாரணையில், அவா்கள் கல்லாங்காடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (22), சரண் (21) என்பதும், வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி ஊசி மூலமாக போதைக்காக உடலில் ஏற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்த காவல் துறையினா் அவா்களிடமிருந்து 600 வலி நிவாரணி மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.