ஜம்மு - காஷ்மீர்: 4 மாதங்களில் 35 மக்கள், வீரர்கள் சுட்டுக்கொலை!
புதிய போப்-ஐ தேர்ந்தெடுக்கும் குழுவில் 4 இந்தியர்கள்!
கத்தோலிக்க திருச்சபையின் அடுத்த போப்-ஐ தேர்ந்தெடுக்கும் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த 4 கார்டினல்கள் உள்ளனர்.
நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பிரான்சிஸ் கடந்த ஏப்.21 ஆம் தேதி காலமானார்.
போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு வரும் ஏப். 26 ஆம்தேதி புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற பின்னர் அவரது விருப்பப்படி புனித மேரி தேவாலயத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், போப் பிரான்சிஸின் மறைவால் வாடிகன் நகரத்தில் ரோமானிய பாரம்பரியமான ‘நோவண்டியேல்’ எனும் 9 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இத்துடன், அடுத்த போப் -க்கான தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த துக்கக் காலத்திற்குப் பிறகு, புதிய போப்-ஐ தேர்ந்தெடுக்க கான்க்ளேவ் எனப்படும் கூட்டத்திற்கு உலகெங்கிலுமிருந்து கத்தோலிக்க திருச்சபைக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டினல்கள் அழைக்கப்படுவார்கள்.
இதில், வாக்களிக்க தகுதிப் பெற்ற 135 கார்டினல்களில் கோவா மாநிலத்தைச் சேர்ந்த பேராயர் ஃபிளிப்பே நெரி ஃபெர்ராரோ (வயது 72), ஹைதரபாத்தைச் சேர்ந்த கார்டினல் அந்தோனி பூலா (63), கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு (51) மற்றும் பசேலியோஸ் கிளேமிஸ் (65) ஆகிய 4 இந்திய கார்டினல்களும் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக, கத்தோலிக்க திருச்சபையில் சுமார் 252 கார்டினல்கள் உள்ள நிலையில் அதில் 135 பேருக்கு மட்டுமே அடுத்த போப்-ஐ தேர்தெடுக்கும் தேர்தலில் வாக்களிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிறகு ‘கான்க்ளேவ்’ படத்தின் பார்வையாளர்கள் அதிகரிப்பு!