பெஹல்காம் தாக்குதல்: அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு காங்., அழைப்பு
பெஹல்காம் தாக்குதல் குறித்து அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி, தில்லி தலைமை அலுவலகத்தில் நாளை (ஏப். 24) காலை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
பெஹல்காம் தாக்குதலில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து செயல்படத் தயாராக உள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்ததைத் தொடர்ந்து, இக்கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
பெஹல்காம் சுற்றுலாத் தளத்தில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
மேலும், இது குறித்து நிரந்தர தீர்வுக்கான பாதையைத் தேர்வு செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா நகரமான, அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பெஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று (ஏப். 22) சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு நிலை குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி அனில் செளஹான் உள்பட ஆயுதப் படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் ஜம்மு - காஷ்மீரின் பாதுகாப்பு நிலை குறித்தும், பாதுகாப்பை அதிகரிக்க மேலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதேபோன்று இந்தத் தாக்குதல் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | துணிச்சலுடன் பயங்கரவாதியை எதிர்த்துப் போராடிய குதிரை ஓட்டி மரணம்!