தஸ்மின் சதம் வீண்: ஸ்னே ராணா சுழலில் வீழ்ந்தது தெ.ஆப்பிரிக்கா!
செப். 6 - தமிழக காவலர் நாள்: முதல்வர் அறிவிப்பு
ஆண்டுதோறும் செப்டம்பர் 6 ஆம் தேதி தமிழக காவலர் நாள் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு இன்று நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசினார்.
அப்போது காவலர் நாள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
”சட்டம் - ஒழுங்கை பாதுகாத்து இரவுபகலாக வேலை செய்யும் காவல்துறையினருக்கான தனி நாளை அறிவிக்க விரும்புகிறேன். 1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 6 ஆம் நாள் காவலர் நாள் கொண்டாடப்படும்.
இந்த நாளில் கடமை, கண்ணியத்தை பின்பற்றி செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை கண்காட்சிகள் நடத்தப்படும். ரத்த தான முகாம்கள் நடத்தப்படும்.” என்றார்.
இதனைத் தொடர்ந்து, நீலகிரி, தருமபுரியில் ஆயுதப் படை காவலர்கள் குடியிருப்புகள் கட்டப்படும், காவல்துறைக்கு 350 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கப்படும், 50 தடயவியல் நடமாடும் வாகனங்கள் வாங்கப்படும் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.