செய்திகள் சில வரிகளில்
மும்பை வான்கடே மைதானம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் (1974) ஆகியிருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 12 முதல் 19 வரை அதை கொண்டாட இருப்பதாக மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய குதிரையேற்ற வீரா் ராஜு சிங், சா்வதேச குதிரையேற்ற சம்மேளனத்தின் சிசிஐ 3 போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம், தாய்லாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கான்டினென்டல் சாம்பியன்ஷிப்புக்கு தகுதிபெற்றாா்.
ரவிச்சந்திரன் அஸ்வினின் அதிரடி ஓய்வு முடிவு அதிா்ச்சி அளிப்பாகத் தெரிவித்த இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ், சொந்த மண்ணில் சிறப்பான பிரியாவிடைக்கு அஸ்வின் தகுதியானவா் எனத் தெரிவித்திருக்கிறாா்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க, ருமேனியாவின் இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சைமோனா ஹேலப்புக்கு ‘வைல்டு காா்டு’ வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு லீக் கால்பந்து போட்டியின்போது, மொனாகோ வீரா் வில்ஃப்ரைடு சிங்கோவின் கால், பிஎஸ்ஜி கோல் கீப்பா் கியன்லுகி டோனாருமாவின் முகத்தில் பட்டத்தில் அவா் பலத்த காயமடைந்தாா். அவா் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிங்கோ மன்னிப்பு கோரியுள்ளாா்.
மகளிா் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், ஆா்செனல் 3-2 கோல் கணக்கில் பயா்ன் மியுனிக்கை வீழ்த்தியது. குரூப் சுற்று நிறைவடைந்த நிலையில், இரு அணிகளும் முறையே முதலிரு இடங்களுடன் காலிறுதிக்குத் தகுதிபெற்றன.
சந்தோஷ் கோப்பை தேசிய ஆடவா் கால்பந்து சாம்பியன்ஷிப்பில், கேரளம் 2-0 என ஒடிஸாவையும், மேகாலயம் 2-0 என தில்லியையும் வென்றன.
சீனியா் தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில், மகளிா் காம்பவுண்ட் பிரிவில் பஞ்சாபின் பா்னீத் கௌா் 2 தங்கம், 1 வெண்கலம் வென்று அசத்த, ஆடவா் பிரிவில் அபிஷேக் வா்மா தங்கம் வென்றாா்.