சாம்பியன்ஸ் டிராபியை இந்தியாவுக்கு கொண்டு வருவோம்: ஹார்திக் பாண்டியா
சொன்னீர்களே.. செய்தீர்களா? பட்டியலிடும் முதல்வர் ஸ்டாலின்!
எதிர்க்கட்சித் தலைவர் இருட்டில் உட்கார்ந்து அமாவாசையை எண்ணிக்கொண்டு இருக்கிறார். அதிமுக சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றினீர்களா என்று சிவகங்கையில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சிவகங்கை மாவட்ட அரசு விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
அப்போது அவர் பேசுகையில், இப்போது வாய்ச்சவடால் விடும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் 2011 மற்றும் 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களின் போது, அ.தி.மு.க. சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளை எடுத்து ஒவ்வொரு வாக்குறுதிக்கு கீழும், அதை நிறைவேற்றிய நாள், அதற்கான அரசாணை எண், அதனால் பயனடைந்தவர்கள் விவரம் என்று பட்டியலிட்டு புத்தகமாக வெளியிடுவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா?
முழுவதுமாக பத்தாண்டுகள் ஆட்சி செய்து, தமிழ்நாட்டை அதல பாதாளத்தில் தள்ளியதை மக்கள் மறந்து இருப்பார்கள் என்று நினைத்து, புது புதுக்கதைகளோடு வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள்!
சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலைத் திட்டம் என்று சொன்னார்களே! நிறைவேற்றினார்களா?
மகளிருக்கு 50 விழுக்காடு மானியத்தில் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று சொன்னார்களே! யாருக்காவது கொடுத்திருக்கிறார்களா?
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் செல்போன் வழங்கப்படும் என்று சொன்னார்களே! கொடுத்தார்களா?
தென் தமிழகத்தில் ‘ஏரோ பார்க்’ வந்துவிட்டதா?
பத்து ஆடை அலங்காரப் பூங்காக்கள் என்று அறிவித்தார்களே, எங்கு இருக்கிறது?
58 வயதுக்கு மேல் ஆனவர்களுக்கு இலவச பஸ் பாஸ் என்று சொன்னார்களே! யாராவது அப்படி பயணம் செய்திருக்கிறீர்களா?
பொது இடங்களில், இலவச வை-ஃபை என்று சொன்னார்களே! எந்த இடத்திலாவது அந்த வசதியை ஏற்படுத்தியிருக்கிறார்களா?
இப்படி வெற்று வாக்குறுதிகளைக் கொடுத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பாழாக்கியவர்கள் - தமிழ்நாடு திவாலாகிவிட்டது என்று புது புரளியைக் கிளப்புகிறார்கள். தவழ்ந்து தவழ்ந்து தமிழ்நாட்டை தரை மட்டத்துக்கு அனுப்பியவர்கள் - பொய்களாலும் அவதூறுகளாலும் நம்மை வீழ்த்த முடியுமா! என்று பார்க்கிறார்கள். உண்மையில், இன்றைக்கு பேசும் எதிர்க்கட்சித் தலைவருடைய ஆட்சிக்காலத்தில், தமிழ்நாடு என்ன நிலைமையில் இருந்தது?
2011 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உபரி வருவாய் மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை, 2013-ஆம் ஆண்டு முதல் பற்றாக்குறை மாநிலமாக மாற்றியதுதான், அ.தி.மு.க. அரசு! 2017-19 ஆண்டுகளில் இந்தியாவிலேயே அதிகளவு வருவாய் பற்றாக்குறை கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை தத்தளிக்க விட்டார்கள்.
இப்படிப்பட்ட இக்கட்டான நெருக்கடியிலிருந்து, தமிழ்நாட்டை மீட்டிருக்கிறோம்! இத்தனைக்கும், அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அவர்கள் முதுகு வளைந்து சேவை செய்த அவர்களுக்கு இணக்கமான ஒன்றிய அரசு இருந்தது! அப்போதும் எதையும் கேட்டு பெறவில்லை! பதவிக்காக மட்டும் டெல்லிக்கு சென்றார்கள்!
ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தததும் அதே ஒன்றிய அரசு, நம்மை தமிழ்நாடு அரசாகப் பார்க்காமல், கொள்கை எதிரிகளாக பார்த்து திட்டங்களை முடக்கினார்கள்!
மத்திய அரசின் அந்த ஓரவஞ்சனைகளையும் மீறிதான், தமிழ்நாட்டை முன்னேற்றிக்கொண்டு இருக்கிறோம்! மத்திய அரசின் திட்டங்களுக்கும், மாநில அரசின் நிதியை செலவு செய்து திட்டங்களை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்!
எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே… எங்களுக்கு தெரியும், எந்த செலவு செய்தால் மக்களுக்கு நன்மை என்பது! உங்கள் நிர்வாகத்தை மக்கள் ஞாபக மறதியால் மறந்திருப்பார்கள் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள்! எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே…. நீங்கள் போடும் எல்லா கணக்கும் தப்பு கணக்கு தான்! மக்கள் எங்களுடைய செயல்பாடுகளையும் – மக்கள் நலத்திட்டங்களையும் கணக்கு போட்டு முதல் மதிப்பெண் கொடுக்கிறார்கள்! எங்களுக்கு அது போதும்!
மற்றொன்றும் சொல்கிறார்… தி.மு.க. ஆட்சிக்கு 13 அமாவாசைகள்தான் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு காலெண்டரை கிழித்துக்கொண்டு இருக்கிறார். அதுதான் இப்போது அவருடைய வேலை. அவர் இருட்டில் உட்கார்ந்து அமாவாசையை எண்ணிக்கொண்டு இருக்கிறார். இருக்கட்டும் பரவாயில்லை… நாம் மக்களுக்கான நன்மைகளை எண்ணி, திட்டங்களை செயல்படுத்துவோம்! மக்களுடைய மகிழ்ச்சிளை மட்டும் எண்ணிப் பார்ப்போம் என்று கூறியிருக்கிறார்.