சோனியா, ராகுல் பிணையில் வந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்: பாஜக
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பிணையில் வெளிவந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்ட் வழக்கின் பண முறைகேடு குற்றச்சாட்டுகளின் கீழ், காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதுதொடர்பாக தில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து ரவிசங்கர் பிரசாத் பேசியுள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது:
”காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பை தெரிவிக்க உரிமை உண்டு. ஆனால், அரசின் சொத்துகளை அபகரித்து நேஷனல் ஹெரால்டுக்கு கொடுக்கும் உரிமை இல்லை. முழு சொத்துகளும் ஒரு குடும்பத்தின் கைகளில் இருப்பதற்கு சுவாரஸ்யமான கார்ப்பரேட் சதி தீட்டப்பட்டிருக்கிறது.
தில்லி, மும்பை, லக்னெள, போபால் மற்றும் பாட்னாவில் சொத்துகள் உள்ளன. யங் இந்தியா என்ற தொண்டு நிறுவனம் இதுவரை என்ன தொண்டு செய்தது என்பது தெரியவில்லை. ரூ. 90 கோடி மதிப்பிலான சொத்துகளை வெறும் ரூ. 50 லட்சம் எனப் பதிந்து ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள சொத்துகள் பெறப்பட்டுள்ளது.
சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் பிணையில் வெளிவந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தை அவர்கள் நாடினர். ஆனால், எந்த பயனும் கிடைக்கவில்லை. சட்டம் அதன் பணியைச் செய்ய அனுமதிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு சோனியா, ராகுல் பதிலளிக்க வேண்டும்.
நரேந்திர மோடி அரசு சட்டம் அதன் வேலையைச் செய்ய அனுமதிக்கும். நேஷனல் ஹெரால்டுக்கு பணம் அளிப்பவர்கள் நல்லவர்கள் அல்ல என்று சர்தார் படேல் கூறியிருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் முழு ஆதரவையும் பாதுகாப்பும் பெற்ற செய்தித் தாள் ஏன் செழிக்கவில்லை? இந்த செய்தித் தாள் விளம்பரத்தைப் பெறவும் அரசாங்க ஒத்துழைப்பு மூலம் சொத்துகளை உருவாக்குவதற்குமான கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சுதந்திரத்துக்காகப் போராடும் மக்களின் குரலை வலுப்படுத்த வேண்டிய செய்தித்தாள், ஒரு தனியார் வணிகமாகவும் ஏடிஎம் ஆகவும் மாறியது” எனத் தெரிவித்தார்.
மேலும், வக்ஃப் சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை எனக் கூறியுள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு ரவிசங்கர் பிரசாத் மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.
“வக்ஃப் வாரியத்தில் பெண்களுக்கு இடமளிப்பதில் சிக்கல் உள்ளதா? பின் தங்கிய முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் பெறுவதில் சிக்கல் உள்ளதா? ஏழை நிலங்கள் அபகரிக்கப்படும் விஷயத்தில் நேர்மையுடன் செயல்படுவதில் சிக்கல் உள்ளதா? இந்த மூன்று கேள்விகளுக்கும் மமதா பதிலளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.