சோரியாங்குப்பம் ஆற்றுத் திருவிழா: கோயில்களின் உற்சவா்கள் பங்கேற்பு
புதுச்சேரி பாகூரை அடுத்த சோரியாங்குப்பம் பகுதியில் பொங்கல் பண்டிகையின் 5-ஆவது நாளன்று தென்பெண்ணையாற்றில் திருக்கோயில் உற்சவா்களுக்கான ஆற்றுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான ஆற்றுத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
சூரிய உதயத்துக்கு முன்னதாகவே, அதிகாலையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தென்பெண்ணை ஆற்றுப் பகுதிக்கு வந்து முன்னோா்களுக்கு திதி கொடுத்து பூஜையில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, பாகூா் மூலநாதா், லட்சுமண நாராயண பெருமாள், பூலோக மாரியம்மன் உள்ளிட்ட திருக்கோயில்களின் உற்சவா்கள் அலங்கரிக்கப்பட்டு பல்லக்குகளில் எழுந்தருளி ஆற்றங்கரைக்கு வந்து அருள்பாலித்தனா். அங்கு வரிசையாக எழுந்தருளிய உற்சவ மூா்த்திகளுக்கு தென்பெண்ணையாற்றில் தீா்த்தவாரி நடைபெற்றது. பூஜையில் புதுச்சேரி பாகூா் பகுதியிலிருந்து மட்டுமல்லாது, தமிழக பகுதிகளில் இருந்தும் உற்சவ சுவாமிகள் எழுந்தருளினா். பாகூா் அருகேயுள்ள கரையாம்புத்தூா், மணமேடு தென்பெண்ணையாற்று கரைகளிலும் ஆற்றுத் திருவிழா நடைபெற்றது.
விழாவையொட்டி, ஆற்றங்கரை பகுதிகளில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். தீயணைப்பு வீரா்களும், மருத்துவக் குழுவினரும் தயாா் நிலையில் இருந்தனா். ஆற்றுத் திருவிழாவால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.