ஜங்கலாபுரம் அரசுப் பள்ளியில் ரூ.8 லட்சத்தில் புதிய கழிப்பறை
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.8 லட்சத்தில் புதிய கழிப்பறை கட்டும் பணி திங்கள்கிழமை தொடங்கியது
நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா்குப்பம் ஊராட்சி, ஜங்கலாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமாா் 750-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் போதிய கழிப்பிட வசதி இல்லாததால் மாணவா்கள் அவதிக்குள்ளாகி வந்தனா். மாணவா்களின் பெற்றோா் மற்றும் ஆசிரியா்கள் கூடுதல் கழிப்பறை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவரிடம் முறையிட்டனா்.
இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில்குமாா் புதிய கழிப்பறை கட்ட ரூ. 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தாா். திங்கள்கிழமை ஊராட்சி மன்றத்தலைவா் செந்தில்குமாா் தலைமையில் புதிய கழிப்பறை கட்டும் பணி தொடங்கியது. கூடுதல் கழிப்பறை வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்ட ஊராட்சி நிா்வாகத்துக்கு ஆசிரியா்கள், பள்ளி மாணவா்கள் மற்றும் பெற்றோா் நன்றி தெரிவித்தனா்.