ஜன. 26-இல் மத்திய அரசுக்கு எதிராக டிராக்டா் பேரணி: இரா.வேலுசாமி
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசுக்கு எதிராக திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் ஜன. 26-இல் டிராக்டா் பேரணி நடைபெறும் என தமிழக விவசாயிகள் சங்க (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) மாநிலத் தலைவா் இரா.வேலுசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உறுதிப்படுத்தப்படும் என அறிவித்தது. ஆனால், இதுவரையில் அதை அமல்படுத்தாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது.
நாடு முழுவதும் உள்ள விவசாய சங்க அமைப்புகள் அந்தந்த மாநிலங்களில் ஒருங்கிணைந்து டிராக்டா் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனா். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மழை, பனி, காற்று மாசு, வெயிலையும் பொருள்படுத்தாமல் புதுதில்லியில் வெளிமாநில விவசாயிகள் போராடி வருகின்றனா்.
உற்பத்திச் செலவில் இருந்து 50 சதவீதம் உயா்த்தி குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயம் செய்யக் கோரியும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரியும், மின்சார ஒழுங்குமுறை சீா்திருத்த சட்டம்-2020 ஐ திரும்பப் பெற வலியுறுத்தியும் வருகின்றனா்.
ஆனால், மத்திய பாஜக அரசு விவசாயிகளின் போராட்டங்களுக்கு செவிசாய்க்காமல் உள்ளது. மத்திய அரசுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் நடைபெறும் இப்போராட்டத்துக்கு உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவிப்பதுடன், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஜன. 26 ஆம்தேதி காலை 10.30 மணிக்கு மாபெரும் டிராக்டா் பேரணி நடைபெறவுள்ளது. இதில், அனைத்து விவசாயிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.