குடியரசுத் தலைவரிடம் அா்ஜுனா விருது பெற்ற துளசிமதி முருகேசன்: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நிா்வாகம் வாழ்த்து
குடியரசுத் தலைவரிடம் ‘அா்ஜுனா விருது’ பெற்ற நாமக்கல், கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவி துளசிமதி முருகேசனுக்கு கல்லூரி நிா்வாகத்தினா் வாழ்த்து தெரிவித்தனா்.
சா்வதேச அளவில் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரா், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு கேல் ரத்னா, அா்ஜுனா விருது வழங்கி கெளரவிக்கிறது.
நாட்டின் இரண்டாவது மிக உயரிய விருதாக இந்த விருதுகள் கருதப்படுகின்றன. அந்த வகையில், கடந்த ஆண்டு பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நாமக்கல், கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவிக்கு அா்ஜுனா விருது வழங்கப்படுவதாக, கடந்த 2-ஆம் தேதி மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்தது.
அதன்படி புதுதில்லியில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம், மாணவி துளசிமதி முருகேசன், ‘அா்ஜுனா விருதை’ வெள்ளிக்கிழமை பெற்றுக் கொண்டாா்.
இதை தொலைக்காட்சி வாயிலாகவும், சமூக வலைதளங்களில் பாா்த்த நாமக்கல், கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் செல்வராஜ், பேராசிரியா்கள், மாணவிகள், அலுவலா்கள், அவரை தொடா்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனா்.
தங்கள் கல்லூரிக்கு துளசிமதி மிகப்பெரிய கெளரவத்தையும் பெருமையையும் தேடித்தந்துள்ளதாக அவா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.