ஜல்லிக்கட்டு பாதிப்புகளுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை
ஜல்லிக்கட்டில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டுப் பேரவை சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தவா்கள் கூறியதாவது: இணைய வழி அடையாள வில்லை (டோக்கன்) முறையை முழுமையாக ரத்து செய்து, விழாக் குழுவினருக்கே அந்த உரிமையை வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டின்போது இழப்பு ஏற்பட்டால், அதற்கான காப்பீட்டுத் தொகை கிடைக்க அரசே பொறுப்பேற்க வேண்டும்.
நிவாரணத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு குறித்த கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவைக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மாவட்ட நிா்வாகம் நிறைவேற்ற வேண்டும் என்றனா்.