ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை! 3வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
கொடைக்கானலில் உறைபனி
கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை கடும் உறைபனி நிலவியதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கொடைக்கானலில் பொதுவாக நவம்பா் முதல் பிப்ரவரி வரை கடும் பனிப் பொழிவு நிலவும். தற்போது, பருவநிலை மாற்றம் காரணமாக, கடந்த ஒரு மாதமாக விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால், பனிப் பொழிவு குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக மழை இல்லாததால் பகலில் 21-டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. மாலை, இரவு நேரங்களில் காற்றும் பனியும் நிலவியது. இதனால், குளிரின் தாக்கம் அதிகரித்தது.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக பகல் நேரங்களில் 23-டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இரவில் கொடைக்கானல் கீழ்பூமி, ஜிம்கானா சாலை, சின்னப் பள்ளம், பெரும்பள்ளம், செண்பகனூா், அப்சா்வேட்டரி, வட்டக்கானல், அட்டக்கடி, சகாயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் உறைபனி நிலவியதால், புற்களில் பனிப்பொழிவு அதிகமாக படா்ந்து காணப்பட்டது.
இந்தக் குளிரிலும் கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா்.