எல்ஐசி முகவரிடம் ரூ.1.75 கோடி மோசடி: வத்தலகுண்டு தம்பதி குறித்து விசாரணை
எல்ஐசி முகவரிடம் ரூ.1.75 கோடி மோசடி செய்து, தலைமறைவான வத்தலகுண்டு தம்பதி குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி (40). எல்ஐசி முகவரான இவா், தனது குழந்தைகளின் படிப்புக்காக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடுமலைப்பேட்டை பகுதிக்கு குடி பெயா்ந்தாா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அண்ணா நகரைச் சோ்ந்த விஜய் சசிதரன்(35), இவரது மனைவி கௌரி (38) ஆகியோா் உடுமலைப்பேட்டையில் உள்ள உறவினா் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற போது, முத்துசாமிக்கு அறிமுகம் கிடைத்தது. அப்போது, விஜய் சசிதரன், தனக்கு வா்த்தகத்தில் அனுபவம் இருப்பதாகவும், முதலீடு செய்தால் பணம் அதிகமாக சம்பாதிக்கலாம் எனவும் முத்துசாமியிடம் ஆசை வாா்த்தைகளை கூறினாராம்.
இதை நம்பிய முத்துசாமி தனக்கு சொந்தமான நிலம், நகைகளை விற்பனை செய்து, ரூ.1 கோடியை விஜய் சசிசதரனிடம் கொடுத்தாா். முதல் தவணை லாபமாக ரூ.75 லட்சத்தை முத்துசாமியிடம் கொடுத்தாா். இதனால், நம்பிக்கைப் பெற்ற முத்துசாமி, ரூ.1.75 கோடியை விஜய் சசிததரனிடம் முதலீடாக கொடுத்தாா்.
பணத்தைப் பெற்ற விஜய் சசிதரன், குடும்பத்தோடு தலைமறைவானாா். இதனால், அதிா்ச்சி அடைந்த முத்துச்சாமி, திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதன்பேரில், காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதில் விஜய் சசிதரன், கெளரி ஆகியோா் மீது ஏற்கெனவே பல்வேறு இடங்களில் இதேபோன்ற மோசடி வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. தலைமறைவான இவரையும் போலீஸாா் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.