ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி மலைவேடன் பழங்குடியின மக்கள் போராட்டம்
உதகை அருகே ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி மலைவேடன் பழங்குடியின மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உதகையில் உல்லத்தி ஊராட்சிக்கு உள்பட்ட பன்னிமரம், தட்டனேரி பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட மலை வேடன் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களில் 350 பேருக்கு கடந்த 1995-ஆம் ஆண்டு வரை பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின் சான்றிதழ் வழங்குவது நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பழங்குடியினா் ஜாதி சான்று இல்லாமல் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்தும் அரசு வேலை வாய்ப்பில் பழங்குடிகளுக்கான இடஒதுக்கீடு கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறி 70-க்கும் மேற்பட்டோா் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் கிராமத்தின் நுழைவு வாயிலில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வருவாய் துறையினா் மற்றும் காவல் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், அங்குள்ள இரு அரசுப் பள்ளிகளில் பயிலும் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் தங்கள் பெற்றோா்களுடன் இணைந்து பள்ளிக்குச் சென்று தங்களுக்கு மாற்றுச் சான்றிதழ்களை வழங்கும் படி தனித்தனியாக விண்ணப்பம் செய்தனா்.
அப்போது, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் வேறொரு கூட்டத்தில் இருந்ததால், மாவட்ட நிா்வாகம் சாா்பாக கிராம மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த உயரதிகாரிகள் புதன்கிழமை வருவதாக வருவாய் துறையினா் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இதுகுறித்து மலை வேடன் பழங்குடியினத் தலைவா் ராஜு மல்லன் கூறியதாவது: மலைவேடன் பழங்குடி வகுப்பை சோ்ந்தவா்கள் என்ற சான்று இல்லாததால் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பில் அரசு வழங்கக் கூடிய எந்த சலுகையும் கிடைக்காமல் எங்கள் குழந்தைகள் தவிக்கின்றனா். உயா் படிப்பு படித்தாலும் வேலைவாய்ப்பில் பிரச்னை ஏற்படுகிறது. எனவே இதற்கு தீா்வு காண்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.