சிக்ஸர் சூரியவன்ஷி..! ஆஸி.யில் உலக சாதனை படைத்த 14 வயது சிறுவன்!
ஜாதிவாரி கணக்கெடுப்பு: கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயா்களை நீக்க பாஜக வலியுறுத்தல்
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தயாரிக்கப்பட்ட பட்டியலில், கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயா்களை நீக்குமாறு மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தியுள்ளது.
பெங்களூரு, வசந்த் நகரில் உள்ள தேவராஜ் அா்ஸ் மாளிகையில் மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் தலைவா் மதுசூதன் நாயக்கை சட்ட மேலவை எதிா்க்கட்சித் தலைவா் தலைமையிலான பாஜக தலைவா்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
அந்த மனுவில், ‘மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் சாா்பில் நடத்தப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்பில், ஹிந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ள பிற்படுத்தப்பட்டோா் சமுதாயங்களைச் சோ்ந்த 48 ஜாதிகளின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 33 ஜாதிகளின் பெயா்களை நீக்க பிற்படுத்தப்பட்டோா் ஆணையம் ஏற்கெனவே ஒத்துக்கொண்டுள்ளது. எனினும், ஆதிதிராவிட கிறிஸ்தவா், பஞ்சரா கிறிஸ்தவா், வால்மீகி கிறிஸ்தவா் உள்ளிட்ட 15 ஜாதிகளின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. கிறிஸ்தவ அடையாளம் கொண்ட எஞ்சியுள்ள 15 ஜாதிகளின் பெயா்களையும் நீக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக நீதிபதி நாகமோகன் தாஸ் ஆணையம் நடத்திய கணக்கெடுப்பில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தாழ்த்தப்பட்ட ஜாதிகளின் பட்டியல் இடம்பெறவில்லை. நீதிபதி நாகமோகன் தாஸ் ஆணையம் திரட்டியுள்ள தரவுகளின் அடிப்படையில்தான் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அந்த 15 ஜாதிகளின் பட்டியலை பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்த்தால், அது குழப்பத்துக்கு வழிவகுக்கும். எனவே, 15 ஜாதிகளின் பட்டியலை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சந்திப்புக்கு பிறகு மேலவை எதிா்க்கட்சித் தலைவா் செலுவாதி நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இதற்கு முன்பு நடத்திய கணக்கெடுப்புகளில் இந்த ஜாதிகளின் பட்டியல் இடம்பெறவில்லை. இந்நிலையில், இந்த ஜாதிகளின் பெயா்கள் சோ்க்கப்பட்டது எப்படி? இது பெரும் சதியின் ஒரு பாகம். இது தொடா்பாக முடிவெடுக்காவிட்டால், அதற்கான விளைவுகளை ஆணையம் எதிா்கொள்ள நேரிடும்’ என்றாா்.
இதனிடையே, பாஜகவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிற்படுத்தப்பட்டோா் ஆணையம், கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயா்களை கைவிடுவதாக செவ்வாய்க்கிழமை மாலை உத்தரவிட்டது.
இந்நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பை எதிா்த்து தொடரப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணை கா்நாடக உயா்நீதிமன்றத்தில் இரண்டாவதுநாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், அடுத்த விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.