7,800 தசரா விழாக் குழுக்களுக்கு தலா ரூ.10,000: அரசு நிதியிலிருந்து நன்கொடை!
மும்பை: ஷாருக்கான் பங்களாவைப் புதுப்பிக்கும் பணிக்கு எதிராக மனு; பசுமை தீர்ப்பாயம் சொல்வது என்ன?
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது மன்னத் பங்களாவைப் புதுப்பித்துக் கட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளார். அதோடு கூடுதல் மாடிகளும் கட்டி வருகிறார்.
இதையடுத்து ஷாருக்கான் அருகில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வாடகைக்குச் சென்று இருக்கிறார். மன்னத் பங்களாவைப் புதுப்பித்துக் கட்ட அனுமதி வழங்கப்பட்டதில் விதிமுறை மீறல் நடந்து இருப்பதாகக் கூறி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமூக ஆர்வலர் சந்தோஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனுவில் ஷாருக்கான் பங்களாவைப் புதுப்பித்துக் கட்ட அனுமதி வழங்கியதில் மகாராஷ்டிரா மண்டல கடற்கரையோர மேலாண்மை ஆணையம் தவறு செய்துவிட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார்.

இம்மனு தீர்ப்பாயத்தில் நீதிபதி தினேஷ் குமார் மற்றும் விஜய் குல்கர்னி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் இறுதியில் அம்மனுவைத் தள்ளுபடி செய்த தீர்ப்பாய நீதிபதிகள், 'கடற்கரையோர ஒழுங்குமுறை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில், ஏற்கனவே இருந்த கட்டிடத்தில்தான் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அங்கு இருந்த சாலைகளில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும், கடற்கரையோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு உட்பட்டுத்தான் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், கடற்கரையோர ஒழுங்குமுறை ஆணையத்தில் பெறப்பட்ட அனுமதியின் அடிப்படையில்தான் கூடுதலாக இரண்டு மாடிகள் கட்டுவதாகவும், மன்னத் பங்களா இருக்கும் பகுதியை குடியிருப்புப் பகுதி என்று மும்பை மேம்பாட்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஷாருக்கான் பங்களா தற்போது 6 மாடிகள் கொண்டது ஆகும். அதில் கூடுதலாக 7 மற்றும் 8வது மாடியைக் கட்டுகிறார்.
6வது மாடியிலிருந்து 7வது மாடிக்கு உள்பக்கமாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுக் கட்டப்பட்டு வருகிறது. ரூ.25 கோடியில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் 8.67 கோடி ரூபாய் வாடகைக்கு ஷாருக்கான் அருகில் உள்ள ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார்.