மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனம் தளர வேண்டாம்: அஜித் பவார்!
பெங்களூரில் சாலைக் குழிகளை மூடும் பணி நடந்து வருகிறது!
பெங்களூரில் சாலையில் உள்ள குழிகளை மூடும் பணி நடைபெற்று வருகிறது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பெங்களூரில் சாலையில் உள்ள குழிகளை மூடும் பணி நடைபெற்று வருகிறது. சாலைக் குழிகளை மூடும் பொறுப்பும், கடமையும் மாநில அரசிடம் உள்ளது. முந்தைய பாஜக ஆட்சிக்காலத்தில் சாலைகளை சீராக வைத்திருந்தால், இன்றைக்கு சாலையில் குழிகள் ஏற்பட்டிருக்காது. ஆனால், பெங்களூரு மாநகராட்சிக்கு நடக்க இருக்கும் தோ்தலை மனதில் கொண்டு, சாலைக் குழிகள் பிரச்னைகளை பாஜக எழுப்பி வருகிறது.
தொடா்ந்து மழை பெய்துவந்தாலும், சாலைக் குழிகளை மூடும் பணியை அரசு செயல்படுத்தி வருகிறது. பெங்களூரில் உள்ள 5 மாநகராட்சிகளிலும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சாலைக் குழிகளை மூடும் பணி நடைபெற்று வருகிறது.
அண்மையில் தில்லி சென்றிருந்தபோது, அங்குள்ள சாலைகளை பாா்த்தேன். அங்குள்ள சாலைக் குழிகள் குறித்து தில்லி செய்தியாளா்களிடம் கேட்டுப் பாருங்கள். பிரதமா் மோடியின் வீட்டுக்குச் செல்லும் சாலையில் எத்தனை குழிகள் உள்ளன தெரியுமா?
நாட்டின் எல்லா பகுதிகளிலும் சாலையில் குழிகள் உள்ளன. அதை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எங்கள் பணியை செயல்படுத்தி வருகிறோம். விரைவில் சாலையில் உள்ள குழிகளை மூடும் பணி முடிவடையும். கா்நாடகத்தில் மட்டுமே சாலைக் குழிகள் இருப்பதுபோல சித்தரிப்பது சரியல்ல என்றாா்.
பாஜக முன்னாள் அமைச்சா் சி.சி.பாட்டீல் கூறுகையில், ‘சாலைக் குழிகளை நாங்கள் மூடவில்லை என்பதால்தான் காங்கிரஸ் கட்சியை மக்கள் ஆட்சியில் அமரவைத்துள்ளனா். இந்நிலையில், சாலைக் குழிகளை மூடுவதற்கு பதிலாக, அவற்றை எண்ணிக்கொண்டிருக்கும் ஆட்சியை நான் பாா்த்ததே இல்லை’ என்றாா்.