நாராயணமூர்த்தி மறைவு: ``கலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த மனிதர்'' - காயத்ரி ஜெயராம் இரங்கல்
'மனதை திருடிவிட்டாய்' இயக்குநர் நாராயணமூர்த்தி மறைவிற்கு நடிகை காயத்ரி ஜெயராம் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
2001 ஆம் ஆண்டு பிரபுதேவா, வடிவேலு, காயத்ரி ஜெயராம், கெளசல்யா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மனதை திருடி விட்டாய்'.
இந்தப் படத்தில் பிரபுதேவா - வடிவேலு கூட்டணியில் அமைந்த காமெடிகள் அனைத்தும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த ஹிட் படத்தை நாராயணமூர்த்திதான் இயக்கி இருந்தார்.

தவிர, சன் தொலைக்காட்சியில் வெளிவந்த 'நந்தினி', 'ராசாத்தி', 'ஜிமிக்கி கம்மல்', 'அன்பே வா', 'மருமகளே வா' போன்ற தொடர்களை இயக்கியிருந்தார்.
இந்நிலையில் உடல்நலக் குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாராயணமூர்த்தி மாரடைப்பால் நேற்று (செப். 23) உயிரிழந்திருக்கிறார்.
அவரின் மறைவிற்கு நடிகை காயத்ரி ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,
" நான் இன்று வரை 'மஞ்சக் காட்டு மைனா' என்று அழைக்கப்படுகிறேன் என்றால் அதற்கு காரணம் என் முதல் தமிழ்ப்படமான 'மனதை திருடிவிட்டாய்' படத்தை இயக்கிய நாராயணமூர்த்தி சார் தான்.
பல வருடங்கள் கழித்து நாங்கள் 'நந்தினி' சீரியலிலும் இணைந்து பணியாற்றினோம். தன்னை கலைக்கே முழுமையாக அர்ப்பணித்த ஒரு மனிதர். இன்று காலை அவர் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
'மனதை திருடிவிட்டாய்' படம் வெளியாகி 24 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தாலும் அந்த படம், பாடல்கள், காமெடிகள் எல்லாம் இன்று வரை மக்களால் நினைவுகூரப்படுகின்றன.
அதுபோலவே நீங்களும் என்றும் நினைவுகூரப்படுவீர்கள் சார்" என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.