Trump: ``ட்ரம்புக்கு நோபல் பரிசு வேண்டுமாம், இதை செய்தால் கிடைக்கும்" - பிரான்ஸ்...
பிரபல சின்ன திரை இயக்குநர் காலமானார்!
பிரபல சின்ன திரை இயக்குநர் ஆர்.டி. நாராயணமூர்த்தி உடல்நலக் குறைவு காரணமாக இன்று(செப். 24) காலமானார்.
இயக்குநர் நாராயணமூர்த்திக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கடந்த ஒரு வார காலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
அவருக்கு அம்சவேணி என்ற மனைவியும், லோகேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். மகன் லண்டனில் இருப்பதால் இயக்குநர் நாராயணமூர்த்தியின் இறுதி சடங்குகள் பம்மலில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஆர்.டி. நாராயணமூர்த்தி கடந்த 2001-ல் நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதைத் திருடிவிட்டாய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ஒரு பொண்ணு ஒரு பையன் படத்தை இயக்கினார்.
இதனைத் தொடந்து, சன் தொலைக்காட்சியில் வெளியான நந்தினி தொடர் மூலம் சின்ன திரையில் நுழைந்தார். முதல் தொடரே மிகப் பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், தொடர்ந்து ராசாத்தி, ஜிமிக்கி கம்மல், அன்பே வா உள்ளிட்ட தொடர்களை இயக்கினார்.
தற்போது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகளே என் மருமகளே தொடரை இயக்கி வந்தார்.
இந்த நிலையில், இயக்குநர் ஆர்.டி. நாராயணமூர்த்தி மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.