ஜார்கண்டில் 6 நக்சல்கள் சுட்டுக் கொலை!
ஜார்கண்ட் மாநிலத்தில் 6 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தின் லால்பானியா பகுதியில் உள்ள லுகு மலைப் பகுதிகளில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து நக்சல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பதுங்கியிருந்த நக்சல்கள் துப்பாக்கியால் சுட்டதால், பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 6 நக்சல்கள் கொல்லப்பட்டதாகவும், பாதுகாப்புப் படையினருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நக்சல்கள் வைத்திருந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகின்றன.
சமீபகாலமாக, சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.