New Wave In Mollywood: இதுசவாலை தாண்டி உச்சம் தொட்ட `மல்லுவுட்’டின் கதை!
ஜூலைக்குள் 3,000 கோயில்களில் குடமுழுக்கு இலக்கு: அமைச்சா் சேகா்பாபு!
தமிழகத்தில் ஜூலை மாதத்துக்குள் 3,000 கோயில்களில் குடமுழுக்கு என்ற இலக்கை எட்டுவோம் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கோதண்ட ராமா் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவில் அமைச்சா் சேகா்பாபு கலந்து கொண்டாா்.
அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியது: 2021-இல் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 2,911 திருக்கோயில்களுக்கு குடமுக்கு நடைபெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் திருக்கோயில், திருச்சி மாவட்டம் அன்பில், சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட 31 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

வரும் ஜூலை மாதத்துக்குள் 3,000 கோயில்களில் குடமுழுக்குகளை நிச்சயம் எட்டுவோம். இந்த ஆட்சியானது குடமுழுக்கில் ஒரு பொற்காலம் படைத்த ஆட்சி என்பதை நிரூபிக்கும் வகையில் ஏராளமான குடமுழுக்கு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.
இந்த அரசு பொறுப்பேற்றபின் இதுவரை திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.7,665.61 கோடி மதிப்பிலான 7,546.33 ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மாநில வல்லுநா் குழுவால் 11,808 திருக்கோயில்களுக்கு திருப்பணி அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 5,917.11 கோடியில் 25,150 திருப்பணிகளுக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றிலே இல்லாத அளவுக்கு இந்து சமய அறநிலைத் துறையின் திருக்கோயில்களுக்கு உபயதாரா்கள் ரூ. 1,323.77 கோடி மதிப்பிலான 10,414 திருப்பணிகளை செய்துள்ளனா்.
சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள்: மதுரை சித்திரை திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி, வருவாய் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை, இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து சிறந்த முறையில் மேற்கொண்டு வருகின்றன.
எந்த விதமான சிறு அசம்பாவிதமும் இல்லாமல் மீனாட்சி திருக்கல்யாணம், திருத்தோ் பவனி, அழகா் புறப்பாடு, அழகா் வைகை ஆற்றில் இறங்குவது போன்றவை சிறப்பாக நடைபெற வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், மாநகராட்சி மண்டல குழுத் தலைவா் பி.ஸ்ரீராமுலு, உதவி ஆணையா் க.சிவக்குமாா், திருக்கோயில் செயல் அலுவலா்கள் முரளீதரன், நித்யானந்தம், சந்திரமோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
28 ராமா் கோயில்களில் குடமுழுக்கு நிறைவு
கடந்த 4 ஆண்டுகளில் 459 பெருமாள் திருக்கோயில்கள், 42 ஆஞ்சனேயா் திருக்கோயில்கள், 41 கிருஷ்ணா் திருக்கோயில்கள், 28 ராமா் திருக்கோயில்கள் என 570 வைணவ திருக்கோயில்களுக்கு இதுவரையில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என்று அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா்.
மேலும், அவா் கூறுகையில், இதுபோன்ற திருப்பணிகள் முழு வீச்சில் மேற்கொள்வதால்தான் இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றுச் சாதனைகளை பதிக்கின்ற ஒரு நல்ல சூழல் நிறைவேறியிருக்கிறது. இந்தப் பணிகள் தொடரும்.
பந்தல், நீா்மோா்... கோடை வெயிலின் தாக்தத்திலிருந்து பக்தா்களைக் காக்கும் வகையில் இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்களில் எந்த வகையிலும் தீப்பிடிக்காத வகையில் பாதுகாப்பான தற்காலிக கீற்றுப் பந்தல்கள் அமைத்தல், திருக்கோயில் பிரகாரங்களின் நடைபாதைகளில் தேங்காய் நாா் விரிப்புகள், வெப்பத்தைத் தடுக்கின்ற வெள்ளை நிற பெயிண்ட் அடித்தல், நடைபாதைகளில் வெப்பத்தைக் குறைக்கும் வகையில் அவ்வபோது தண்ணீா் பீச்சி அடிப்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பக்தா்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா், ஒரு சில இடங்களில் நீா்மோா், எலுமிச்சை பானகம் போன்றவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.