Relationship: இந்த 3-ம் இருந்தால் உங்கள் நண்பன் உங்களைக் காதலிக்கிறான் என்று அர்...
`டங்ஸ்டன், இந்தி திணிப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு'- அதிமுக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
சென்னையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் செயற்குழு - பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. வானகரத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஃபெஞ்சல் புயல் நடவடிக்கைகள், விலைவாசி உயர்வு, ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட விவகாரங்களில் தி.மு.க அரசைக் கண்டித்தும், டங்ஸ்டன் சுரங்கம், இந்தித் திணிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய பா.ஜ.க அரசை வலியுறுத்தியும் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவை,
`` * ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதுகாப்பு நடவடிக்கை, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை எதுவும் செய்யாமல், பேரிடர் காலங்களில் மக்களுக்கு குறைந்தபட்சம் உணவு, உறைவிடம், குடிநீர் சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக் கூட ஒழுங்காக முறையாக நிறைவேற்றாத ஸ்டாலின் தலைமையிலான விடியா தி.மு.க அரசுக்கு கண்டனம்.
* சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் நடமாட்டம், மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு, முத்திரைத்தாள் கட்டண உயர்வு என மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி வரும் தி.மு.க அரசுக்கு கண்டனம்.
* பழைய ஓய்வூதிய திட்டம், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் ஊதியம் முரண்பாடு, பணி நிரந்தரம் மற்றும் விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள் ஆகியோரின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வஞ்சித்து வரும் தி.மு.க அரசுக்கு கண்டனம்.
* டங்ஸ்டன் சுரங்கம் மேலூருக்கு அருகில் கொண்டு வர மத்திய அரசு ஒப்பந்த புள்ளி கோரியபோது 10 மாத காலம் அவகாசம் இருந்தும் அவற்றை தடுக்க தவறிய தி.மு.க அரசுக்கு கண்டனம். டங்ஸ்டன் சுரங்கம் அமைவதை மத்திய அரசு கைவிடமாறு வலியுறுத்தல்.
* 1) திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திட மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.
2) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு வழியாக தமிழ் இடம்பெற வலியுறுத்தல்.
3) இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு - மத்திய அரசால் இயற்றப்படும் சட்டங்களின் பெயர்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதைக் கைவிட்டு ஆங்கிலத்திலேயே தொடர மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.
* விளம்பரத்துக்காக கார்ப்பந்தயம் நடத்துதல், வரைமுறையின்றி சிலைகள் வைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பேனா நினைவுச் சின்னம், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டு கூட்ட அரங்கம் கட்டுதல் போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து ஆடம்பர செலவு செய்து மக்கள் நலன்களை பின்னுக்குத் தள்ளி அரசு நிதியை வீணடிக்கும் தி.மு.க அரசுக்கு கண்டனம்.
* அ.தி.மு.க ஆட்சியின் போது குடிமராமத்து திட்டம், தடுப்பணைகள் திட்டம், அணைகள், ஏரிகள், குளங்கள் மற்றும் நீர் நிலைகளை ஆழப்படுத்தி நீரை சேமிக்கும் திட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டதை தி.மு.க அரசு தொடர்ந்து செயல்படுத்த தவறியதற்கு கண்டனம்.
*கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு, பாண்டியாறு-புன்னம்புழா ஆகிய திட்டங்களையும் தொடர் நடவடிக்கை எடுத்து செயல்படுத்த தவறிய தி.மு.க அரசுக்கு கண்டனம்.
*நீட் தேர்வு குறித்து கபட நாடகம் ஆடிக் கொண்டிருக்கும் தி.மு.க அரசுக்கு கண்டனம்.
*வாக்காளர்கள் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதை சரி செய்திடவும், தேர்தல் நியாயமாக நடத்தப்படவும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தல்.
* கல்வி பொருளாதாரம் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமையும், சம வாய்ப்புகளையும் வழங்கிடும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தி.மு.க அரசுக்கு வலியுறுத்தல்.
* 1) சிறுபான்மையினர் நலன் காக்க தி.மு.க அரசுக்கு வலியுறுத்தல்.
2) தி.மு.க ஆட்சிக்கு வந்தால் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துவிட்டு, இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளாத விடியோ தி.மு.க அரசை கண்டிக்கிறோம்.
3) பட்டியலின மக்களின் உரிமைகளை காப்பாற்றவும், பாதுகாக்கவும் தவறிய தி.மு.க அரசுக்கு கண்டனம்.
* மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில் மாநில பட்டியலில் இடம்பெற்றிருந்த கல்வியை, நாட்டில் அவசரநிலை அமலில் இருந்த காலகட்டத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதை, மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்கும் வகையில் அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.
* தமிழ்நாட்டுக்கான நிதிப் பகிர்வு பாரபட்சம் இல்லாமல் வழங்கிட மத்திய அரசுக்கு வலியுறுத்தல்." உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...