"மெய்யழகன் மலையாளத்துல வந்திருந்தா இதுதான் சினிமான்னு கொண்டாடியிருப்பாங்க" - இந்...
அமெரிக்கா: உறுதிப்படுத்திய டொனால்டு ட்ரம்ப்; 18,000 இந்தியர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்!
அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், இன்னும் ஒரு மாதத்தில் பதவியேற்கவுள்ள நிலையில் அமெரிக்காவின் வரலாற்றில் மிகப்பெரிய நாடு கடத்தல் செயல்முறைக்கு அவர் உறுதியளித்துள்ளதால், இறுதி உத்தரவுடன் ஆவணமற்ற ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க குடி வரவு மற்றும் சுங்க அமலாக்க அமைப்பு (ICE) வெளியிட்ட பட்டியலில், 18,000 ஆவணமற்ற இந்தியர்கள் உட்பட 1,450,000 மக்கள் நாடு கடத்தப்படும் நிலையில் உள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில், அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்று சுமார் 90,000 இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப், குஜராத் மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பல ஆவணமற்ற இந்தியர்கள், அமெரிக்காவில் தங்கள் இருப்பை சட்டப்பூர்வமாக்குவதற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களில் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா முதல் இடத்தில் இல்லை.
ஆசியாவில், நவம்பர் 2014 இல் வெளியிடப்பட்ட ICE தரவுகளின்படி, 37,908 ஆவணமற்ற நபர்களுடன் சீனா முதலிடத்திலும்... அதே நேரத்தில் இந்தியா 17,940 எண்ணிக்கையுடன் 13வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் தற்போதைய எல்லைப்பாதுகாப்பு மற்றும் கடுமையான குடியேற்றக் கொள்கைகளின் கீழ் நாடு கடத்தும் செயல்பாட்டில், “ஒத்துழைக்காத நாடுகளில்” ஒன்றாக இந்தியா வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள பிற நாடுகளாகப் பூட்டான், கியூபா, இரான், பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் வெனிசுலா ஆகியவை அடங்கும். இந்த ஒத்துழைப்பின்மை அமெரிக்காவுடனான உறவுகளில் மேலும் சவால்களை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
``புலம்பெயர்ந்தோரைத் திரும்பப் பெற மறுக்கும் நாடுகளுக்கு, நான் அவர்களை வெளியேற்ற விரும்புகிறேன். சம்பந்தப்பட்ட நாடுகள் அவர்களைத் திரும்பப் பெற வேண்டும். அவர்கள் நாங்கள் சொல்வதற்கு மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில், அந்த நாடுகளுடன் நாங்கள் வணிகம் செய்ய மாட்டோம். மேலும் அவர்கள்மீது கணிசமான வரிகளை விதிக்கிறோம்” என்று டொனால்ட் டிரம்ப், டைம் பத்திரிகைக்குச் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.