டாஸ்மாக் சோதனையை எதிர்த்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு!
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய தொடா் சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை மறுநாள் தீர்ப்பளிக்கிறது.
டாஸ்மாக் நிர்வாகம் சார்பிலும், 2007- 2021ஆம் ஆண்டு வரை முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது விசாரிப்பது ஏன் என தமிழக அரசு தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 23ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மாா்ச் மாதம் நடத்திய தொடா் சோதனை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரியும் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.
முன்னதாக வழக்கு விசாரணையின்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞா், டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிராக தமிழக போலீஸாரால் பதிவு செய்யப்பட்ட 41 முதல் தகவல் அறிக்கைகள் மற்றும் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள இசிஐஆா் விவரங்களையும், சோதனை தொடா்பான விவரங்களையும் அறிக்கையாக சீலிட்ட உறையில் தாக்கல் செய்திருந்தார்.
கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கி 2021 வரை பதிவான வழக்குகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்கிறோம் எனக் கூறும் அமலாக்கத் துறை, இத்தனை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தது? இன்று டாஸ்மாக், நாளைக்கு எந்தத் துறையைக் குறிவைக்கவுள்ளனா் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அரசு தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில், நாளை மறுநாள் தீர்ப்பளிக்கப்படவிருக்கிறது.