Gold Rate: உச்சம் தொட்ட தங்கம்! ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,120 உயர்வு; இன்றைய தங்...
டிரம்ப்பின் 25% வரி விதிப்பால் என்னென்ன துறைகளுக்கு அதிக பாதிப்பு?
இந்திய பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் 25 சதவீத வரி விதிப்பால் வேளாண்மை, எரிசக்தி, ஜவுளி, மின்னணுப் பொருள்கள், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்பட பல முக்கியத் துறைகள் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களில் மின்னணுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்டவை முன்னணியில் உள்ளன.
இத்தகைய வரி விதிப்பில் இருந்து மருந்துப் பொருள்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவையும் தற்போதைய வரி விதிப்பு வரம்புக்குள் வந்தால், அது மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆப்பிள் ஐபோன்களில் 44 சதவீதம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், தற்போதைய வரி விதிப்பு இந்தியாவின் வேகமாக வளா்ந்துவரும் கைப்பேசி உற்பத்தித் துறைக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று கருதப்படுகிறது.
பொறுமை இழந்த டிரம்ப்: இந்திய பொருள்கள் மீதான வரி விதிப்பு குறித்து அமெரிக்க அதிபா் மாளிகையில் அந்நாட்டு தேசிய பொருளாதார கவுன்சில் இயக்குநா் கெவின் ஹேசட் கூறியதாவது: இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் போதிய முன்னேற்றம் ஏற்படாததால் அதிபா் டிரம்ப் பொறுமை இழந்திருக்கக்கூடும். எனினும் அமெரிக்கா்களின் நலன் கருதி, தற்போதைய சூழலை 25 சதவீத வரி விதிப்பு சரிசெய்யும் என்றும் அவா் கருதியிருக்கக்கூடும் என்று தெரிவித்தாா்.