டிரம்ப் உரைக்கு எதிர்ப்பு: ஜனநாயகக் கட்சி எம்.பி. வெளியேற்றம்!
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உரையின் போது எதிர்க்கருத்து தெரிவித்த ஜனநாயகக் கட்சி எம்.பி. வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் 47-வது அதிபரான டொனால்ட் டிரம்ப், ஜனவரி மாதம் பதவியேற்றதற்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றினார்.
டிரம்ப் உரையாற்றிய சில நிமிடங்களில், டெக்சாஸின் ஹூஸ்டனைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினரான அல் க்ரீன், எழுந்து நின்று, “மதிப்பிற்குரிய அதிபரே.. உங்களுக்கு அதிகாரம் இல்லை!' என்று கூச்சலிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் கடுமையான அமளியில் ஈடுபட்டனர். அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமளிக்கிடையே அதிபர் டிரம்ப் உரையாற்றினார்.
குடியரசுக் கட்சியினர் அமெரிக்கா..! என்று கூச்சலிட்டனர். இதனால், அவைத் தலைவர் மைக் ஜான்சன் அவரை சபையிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.
இதையும் படிக்க: இந்தியாவுக்கு 100% வரி விதிக்கப்படும்: என்ன சொல்கிறார் டிரம்ப்?

வெளியேறிய க்ரீன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இது உலகின் பணக்கார நாடு, ஆனாலும் நமது நாட்டில் மக்களுக்கு நல்ல மருத்துவவசதி கிடையாது. இதற்காக நாம் சிறப்பாகச் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
க்ரீன் மட்டுமின்றி, ஜனநாயகக் கட்சிப் பெண்கள் எம்பிக்கள் பலரும் அதிகரித்து வரும் செலவுகளைக் கண்டித்து அதிபர் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிந்து வந்து தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
அவர்களைத் தவிர்த்து மற்ற எம்பிக்கள் உக்ரைனுக்கு ஆதரவைக் காட்ட, அந்நாட்டின் கொடியின் வண்ணங்களைக் குறிக்கும் வகையில் மஞ்சள் மற்றும் நீல நிற உடைகளை அணிந்து வந்திருந்தனர்.
இதையும் படிக்க: அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது! -டிரம்ப்