டிரெண்ட் ஆகும் டோலோ 650 மாத்திரை! என்ன ஆனது?
எக்ஸ் தளத்தில் திடீரென்று டோலோ 650 மாத்திரை டிரெண்டாகி வருகின்றது.
அமெரிக்காவில் பயிற்சி பெற்று வரும் மதுரையைச் சேர்ந்த டாக்டர் பால் என்றழைக்கப்படும் மருத்துவர் பழனியப்பன் மாணிக்கத்தின் பதிவால் டோலோ 650 டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
மருத்துவரின் விமர்சனம்
கரோனா நோய்த் தொற்றுக்கு பிறகு இந்தியர்கள் சகஜமாக உட்கொள்ளும் மாத்திரையாக டோலோ 650 மாறியுள்ளது. ஏன், டோலோ 650 மாத்திரைகள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், “இந்தியர்கள் கேட்பரி ஜெம்ஸ் சாக்லெட்டை போன்று டோலோ 650 மாத்திரைகளைப் பயன்படுத்துகிறார்கள்” என்று கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக டாக்டர் பால் வெளியிட்ட பதிவு பேசுபொருளாக மாறியுள்ளது.

மருத்துவரின் பதிவுக்கு கமெண்ட் செய்த ஒருவர், லேசான காய்ச்சல் அறிகுறி தெரிந்தாலே எனது தாய் தினசரி இரண்டு மாத்திரை உட்கொள்வார் என்று பதிலளித்துள்ளார்.
ஒருவர் எங்களுக்கு சிற்றுண்டி என்றும் மற்றொருவர் மாயாஜாலம் மிக்க டோலோ 650 புற்றுநோயைகூட குணப்படுத்தும் என்றும் நகைச்சுவையாகவும் பதிவிட்டிருந்தார்.
வழக்கம்போல் நம்மவர்கள் குரோக்கையும் விட்டுவைக்கவில்லை. டோலோவால் ஏற்படும் விளைவுகள் பற்றி கேள்விகளை எழுப்ப, குரோக்கோ அனைத்து விளக்கத்தையும் அளித்துவிட்டு, நான் மருத்துவர் அல்ல, மருத்துவரை அணுகவும் எனவும் தெரிவித்துவிட்டது.

கரோனாவால் புகழடைந்த டோலோ
2020 முதல் 2022 வரையிலான கரோனா நோய்த் தொற்று காலத்தில் டோலோ பெயரை உச்சரிக்காதவர்கள் இருக்க வாய்ப்பில்லை.
லேசான காய்ச்சல் அறிகுறி தெரிந்தால்கூட டோலோ 650 மாத்திரையை எவ்வித தயக்கமும் இன்றி மக்கள் உட்கொள்ளத் தொடங்கிய காலம் அது.
இந்தியாவில் மட்டும் 350 கோடிக்கும் அதிகமாக டோலோ 650 மத்திரைகள் விற்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. காபி, ரொட்டியுடன் டோலோவை உட்கொள்வதை பழக்கமாக மாற்றினர்.
இதன்காரணமாக டோலோ 650 உற்பத்தியாளரான மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் மருத்துவச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக உருவெடுத்தது.
அப்போதுதான்.. டோலோ உள்ளிட்ட பாராசிட்டமால் மாத்திரைகளைக் கூட மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துக் கடைகள் விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைகள்
அதன்பிறகு, 2024 ஆம் ஆண்டில் டோலோ 650 மாத்திரையால் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதாகவும் கல்லீரல் பிரச்னைகள் ஏற்படும் என்றும் தகவல்கள் பரவின.
ஆனால், டோலோ 650 மாத்திரை உலகளவில் காய்ச்சல் மற்றும் வலிக்கு பரவலாக பயன்படுத்தப்படும் மருந்து என்றும் சர்வதேச அளவில் ஆய்வுகளுக்கு பிறகு அங்கீகரிக்கப்பட்டவை என்றும் மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.
மருத்துவரின் அறிவுரையின்றி அளவுக்கு மீறி எந்த மாத்திரையை உட்கொண்டாலும் ஆபத்துதான் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கரோனா காலத்தில் டோலோ 650 மாத்திரைகளை பிரபலப்படுத்த மருத்துவர்களுக்கு சுமார் ரூ. 1,000 கோடி மதிப்பிலான மாத்திரைகளை இலவசமாக மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் இருப்பது ஒருபுறம்.
விளைவுகள்
காய்ச்சல் என்றால் முதல்கட்டமாக எடுத்துக்கொள்ள வேண்டிய பாராசிட்டமால் 500 மில்லிகிராம் மாத்திரையை தவிர்த்துவிட்டு, அனைவரும் 650 மில்லிகிராம் டோலோவை எடுத்துக்கொண்டதன் விளைவு தற்போது பலருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டது.
இதனால்தான், பாராசிட்டமல் 500 மில்லிகிராம் மாத்திரைகள் போட்டால் காய்ச்சல் போன்றவை சரியாகாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது அதிகப்படியான மருந்தை அதிகமுறை எடுத்துக்கொண்டு, அதற்கு உடல் பழகிவிட்டதால், அதைவிடக் குறைவான மருந்தைக் கொடுக்கும்போது, அதனை உடல் அலட்சியம் செய்துவிடுகிறது.
அதுமட்டுமல்ல, லேசான காய்ச்சல் அறிகுறி, உடல் வலி ஏற்பட்டாலே டோலோ மாத்திரையை உட்கொள்வதால் உண்மையான உடல்நலப் பிரச்னை என்னவென்பது தெரியாமலேயே, நோய் பெரிதானப் பிறகுதான் மருத்துவமனைக்கு வரும் நிலை ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா என்பதுபோல, இனி டோலோ 650யை இரண்டு மாத்திரைகள் போட்டால்தான் லேசான காய்ச்சல் குணமாகலாம் என்ற நிலைகூட ஏற்படலாம். எனவே, மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனை இன்றி தனக்குத் தானே எடுத்துக்கொள்ளும் முறையை கைவிடுவது ஒன்றே சாலச்சிறந்தது என்பது தெளிவாகிறது.
(மருத்துவர்களின் ஆலோசனை இன்றி டோலோ மட்டுமின்றி எந்த மாத்திரையையும் உட்கொள்ள வேண்டாம்)