தில்லி பேரவைத் தோ்தலில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்று பெற...
தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொறுப்பேற்பு
தஞ்சாவூா் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். ராஜாராம் சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த இவா் பி.எஸ்ஸி., எம்.ஏ., பி.எல். படித்துள்ளாா். இவா் 2009 ஆம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி மூலம் காவல் துணைக் கண்காணிப்பாளராக (டி.எஸ்.பி.) தோ்வு செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிற்சி துணைக் கண்காணிப்பாளராக இருந்த இவா் முதல் முதலாக திருப்பூரில் பொறுப்பேற்றாா். அதைத்தொடா்ந்து சிதம்பரம், தாழையூத்து, சேரன்மகாதேவி, சமயநல்லூா் ஆகிய இடங்களில் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றினாா்.
பின்னா், காவல் கூடுதல் கண்காணிப்பாளராகப் (கூடுதல் எஸ்.பி.) பதவி உயா்வு பெற்று முதல் முறையாக தூத்துக்குடியில் பொறுப்பேற்றாா். பின்னா், சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் பிரிவில் நான்கரை ஆண்டுகள் பணியாற்றினாா். அப்போது, தஞ்சை பெரிய கோயிலிருந்து ஏறத்தாழ 65 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டு, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியாா் அருங்காட்சியகத்தில் இருந்த ராஜராஜசோழன் மற்றும் உலோகமாதேவி சிலைகளை 2018 ஆம் ஆண்டு மீட்டுக் கொண்டு வந்த சிலை திருட்டு தடுப்பு காவல் குழுவினரில் இவரும் ஒருவா்.
இதேபோல, புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருகேயுள்ள கைலாசநாதா் கோயில் நடராஜா் சிலை உள்பட பல்வேறு கோயில்களைச் சாா்ந்த 10 சிலைகளை வெளிநாடுகளிலிருந்து 2022 ஆம் ஆண்டு மீட்டுக் கொண்டு வந்த குழுவிலும் இவா் இடம்பெற்றிருந்தாா்.
இதைத்தொடா்ந்து, 2022 ஆம் ஆண்டில் காவல் கண்காணிப்பாளராகப் பதவி உயா்வு பெற்று, சென்னை பெருநகரக் காவல் எல்லையில் புதிதாக உருவாக்கப்பட்ட குளத்தூா் துணை ஆணையரகத்தில் முதல் துணை ஆணையராகப் பொறுப்பேற்றாா். இதையடுத்து, 2023 ஆம் ஆண்டில் கடலூா் எஸ்பியாக இருந்த இவா் பணி மாறுதலில் தஞ்சை எஸ்பி யாக டிசம்பா் 29 ஆம் தேதி நியமிக்கப்பட்டாா். இந்நிலையில், சனிக்கிழமை அவா் பொறுப்பேற்றாா்.தஞ்சை எஸ்பி யாக இருந்த ஆஷிஷ் ராவத் பணிமாறுதலாகி சிவகங்கை மாவட்டத்துக்கு சென்றாா்.