சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கம்: பயணிகள் வரவேற்பு!
தஞ்சை பெருநந்திக்கு 2 ஆயிரம் கிலோ காய்கறி, பழங்களால் அலங்காரம்!
பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக தஞ்சைப் பெரிய கோயிலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். மாட்டுப் பொங்கலை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள பெருநந்திக்கு 2 ஆயிரம் கிலோ காய்கறி, பழங்கள், இனிப்புகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கும் இக்கோயில் தமிழர்களின் கட்டடக்கலைக்கும் - சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் அழகைக் காணத் தினமும் உள்நாடு - வெளிநாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது பொங்கல் தொடர் விடுமுறை என்பதால் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரிய கோயிலில் குவிந்து கோயிலின் அழகைக் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பெருநந்திக்கு இரண்டாயிரம் கிலோ காய்கறிகள், பழ வகைகள், இனிப்புகளால் சிறப்பு அலங்காரம்
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள் சந்தனம் பால் தயிர் திரவிய பொடி கரும்புச்சாறு இளநீர் தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கேரட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், வாழைக்காய், வாழைப்பூ, தக்காளி, காலிஃப்ளவர், பச்சைமிளகாய் உள்ளிட்ட பல்வேறு காய்கறி வகைகள் மற்றும் மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, அன்னாசிப்பழம் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் ஜாங்கிரி, சந்திரகலா, சூர்யகலா, பாதுஷா, மைசூர்பாகு உள்ளிட்ட இனிப்பு வகைகள் என சுமார் இரண்டாயிரம் கிலோவால் சிறப்பு அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட 108 பசுக்களுக்கு கோ பூஜை நடைபெறுகிறது. இதில் மாட்டின் உரிமையாளர்கள் பசு மற்றும் கன்றுகளுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் பொட்டு வைத்தும், புத்தாடை அணிவித்தும் பூஜை செய்தனர். தொடர்ந்து பசுக்களுக்குப் பொங்கல் வழங்கி கால்நடைகளை வழிப்பட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.