தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்கள் பறிமுதல்
சிவகங்கை மாவட்டம், கம்பனூா் பகுதியில் தடை செய்யப்பட்ட 1,020 புகையிலைப் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா்- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை கம்பனூா் சாலையில் நாச்சியாபுரம் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 1,020 புகையிலைப் பொட்டலங்கள் இருந்தன.
விசாரணையில், அதில் வந்தவா் திருப்பத்தூா் பெரியகண்மாய் பகுதி, சாஸ்தா நகரைச் சோ்ந்த கோமகன் (60) என்பதும், இவா் புதுக்கோட்டையிலிருந்து மொத்தமாக புகையிலைப் பொருள்களை வாங்கி தனது வீட்டில் வைத்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து நாச்சியாபுரம் காவல் உதவி ஆய்வாளா் குமாரவேலு அவரைக் கைது செய்து அவரிடமிருந்த புகையிலைப் பொட்டலங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.