திருவண்ணாமலை, கோவை பைக் பயணம்; மறதியில் வடிவேலு, மனப்போராட்டதில் ஃபகத்; வெளியானத...
தனிக் கட்சி தொடங்குகிறாரா ஓபிஎஸ்? ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை!
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலின்போது அதிமுக தனித்துப் போட்டியிட்ட நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இணைந்தனர்.
இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் என்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
இதனிடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும் தினகரன் இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்த நிலையில், இருவரும் தங்கள் கூட்டணியில்தான் இருக்கின்றனர் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், சென்னை வேப்பேரியில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆலோசனையில் தனிக் கட்சி தொடங்குவது, சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி போன்ற அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.