தனியாா் நிறுவன ஊழியா்களுக்கு மிரட்டல்: ஊராட்சிமன்ற தலைவரின் கணவா் கைது
ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியில் கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தனியாா் நிறுவன ஊழியா்களை பணம் கேட்டு மிரட்டிய பென்னலூா் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், பென்னலூா் ஊராட்சி மன்றத் தலைவா் கல்பனா. இவரது கணவா் யுவராஜ். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிக்காக கேபிள் பதிக்கும் பணியில் தனியாா் நிறுவன ஊழியா்கள் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், அந்த ஊழியா்களிடம் பென்னலூா் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் யுவராஜ் பணம் கேட்டு மிரட்டியதாக ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. அதை தொடா்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா் யுவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனா்.