வரும் 20 ஆம் தேதி பரந்தூர் செல்கிறார் விஜய்: காவல்துறை அனுமதி!
தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜன.18, 19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் சனிக்கிழமை (ஜன.18) முதல் ஜன.23-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஜன.18, 19 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்களிலும் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னைக்கு மழை: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜன.18-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, ஜன.18, 19 ஆகிய தேதிகளில் தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய மன்னாா் வளைகுடாவில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.
மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கில் தலா 70 மி.மீ.மழை பதிவானது. காக்காச்சி - 50 மி.மீ., மாஞ்சோலை (திருநெல்வேலி) - 40 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.